புரபஷனல் போட்டோகிராஃபர்களுக்கு பொறந்தாச்சு விடிவு காலம்!

போட்டோ கன்சீர்ஜ்: புரபஷனல் போட்டோகிராஃபர்களுக்கு பொறந்தாச்சு விடிவு காலம்!



‘‘மச்சான் என்னை ஒரு போட்டோ எடேன்...!

‘‘ஏன்டா நீயே செல்ஃபி எடுத்துக்கலாமே...’’

‘‘மச்சா, நீ எடுக்குற மாதிரி வராதுடா... ப்ளீஸ், ஒரு போட்டோ எடேன்...!’’


இப்படி நண்பர்கள் உங்கள் ஃபோட்டோ எடுக்கும் திறமையை மதிப்பார்களா....? எந்த இடத்துக்குச் சென்றாலும் அந்த இடத்தின் அழகியலை உங்கள் செயற்கை விழியின் மூலம் படம் பிடிப்பீர்களா...? உங்கள் லேப்டாப்பில் மூவிஸ் என்கிற ஃபைல்கள் அடைத்திருக்கும் இடத்தைவிட நீங்கள் க்ளீக்கிய போட்டோக்கள் அதிக ஸ்டொரேஜை எடுத்துக் கொண்டிருக்கிறதா...? அப்படியானால் இந்தக் கட்டுரை உங்களுக்குத்தான். மேற்கொண்டு படியுங்கள்...

சென்னையின் நுங்கம்பாக்கத்தில் ஷெஃபாலி தாதாபாய் போட்டோ கன்சீர்ஜ் (Photo Concierge) என்கிற நிறுவனத்தைத் தொடங்கி நடத்தி வருகிறார். இந்த நிறுவனம் பெங்களூரூவை தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. இவருடன் சேர்ந்து அமெரிக்காவைச் சேர்ந்த ஸ்டான் டாங், டேவிட் கனால், க்லெபர் வேரா ஆகியோர் டெக்னாலஜி, கண்டெண்ட் லைப்ரரி மற்றும் குவாலிட்டி பிரிவுகளில் தங்கள் பங்கை அளித்து இந்த நிறுவனத்தி நடத்தி வருகின்றனர். பிப்ரவரி 2016-ல் தான் இந்த நிறுவனம் தொடங்கபட்டது என்பதைவிட இவர்கள் சாதித்துவரும் உச்சத்தை பார்க்கும்போது ஆச்சர்யமாகத்தான் இருக்கிறது. நாம் ஷெஃபாலியை சந்தித்து ஒரு பேட்டி கண்டோம்.

இதன் கான்செப்ட் என்ன?

‘‘இது ஒரு ஒருங்கிணைக்கப்பட்ட ஒரு டிஜிட்டல் மார்க்கெட். ‘ஸ்டாக் போட்டோகிராஃபி’ என்னும் கான்செப்ட்டை மீண்டும் புது விதத்தில் வரையறுக்கும் முயற்சி என்றுகூட சொல்லலாம். இந்த ஆன்லைன் மார்க்கெட்டில் போட்டோஸ், வீடியோஸ் முதலானவற்றை விற்கவும், வாங்கவும் முடியும். டி.எஸ்.எல்.ஆர், 5டி கேமராக்கள் முதல் செல்போன் கேமரா வரை என அனைத்திலும் நாம் எடுக்கும் போட்டோக்களை இதில் பதிவேற்றம் செய்யலாம்.’’

எப்படிச் செய்வது?

‘‘போட்டோ கன்சீர்ஜின் இணையதளத்துக்குப் போய், நாம் முதலில் ஒரு அக்கவுன்ட்டை கிரியேட் செய்துகொள்ள வேண்டும். பின்னர் நம் அக்கவுண்ட்டில், நம் போட்டோக்களை பதிவேற்றம் (Upload) செய்துவிட்டு, ஆர்டருக்கு காத்திருக்க வேண்டும்.’’

இதில் எப்படி உங்களுக்கு ஆர்வம் வந்தது?

‘‘நானும் ஒரு போட்டோகிராபர்தான். எட்டு வருடங்களுக்குமுன் ஒரு கார்ப்பரேட் நிறுவனத்தின் மார்க்கெடிங் பிரிவில் இருந்தேன். அவுட்லுக் பத்திரிகையில் மார்கெட்டிங் மேனேஜ்மென்ட்டில் இருந்திருக்கிறேன். பள்ளியில் இருந்தே விதவிதமான போட்டோக்கள் எடுக்கும் பழக்கம் உண்டு. திருமணத்துக்குப்பிறகு வேலையில் இருந்து நின்றுவிட்டேன். ஒருநாள், போட்டோகிராஃபியை எப்படி வளர்த்து அடுத்த கட்டத்துக்குக் கொண்டு போகலாம் என என் நண்பர்களுடன் ஆலோசனை செய்து கொண்டிருந்தபோது வந்த ஐடியாதான் இந்த போட்டோ கான்சீர்ஜ். சில புகைப்படக் கலைஞர் நண்பர்களும் இதற்கு உதவ முன்வந்தார்கள். திறமைகளை வெளியே கொண்டுவர இதுவே சரியான நேரம் என முடிவு செய்து, இணையதளம் உருவாக்கினோம்.’’



எப்படி ப்ரோமோஷன் செய்தீர்கள்?

‘‘வெப்சைட்டை லான்ச் செய்வதற்கு முன்பாக, பேஸ்புக் மற்றும் டுவிட்டரில் பல்வேறு பிரிவுகளில் போட்டோகிராஃபி போட்டிகளை நடத்தினோம். அதில், நம் இந்தியப் புகைப்படக் கலைஞர்கள் காட்டிய ஆர்வம் மிகுந்த ஆச்சரியத்துடன் சேர்த்து, இதை கையில் எடுப்பதற்கான ஊக்கத்தையும் அளித்தது.’’

உங்களுக்குப் போட்டியாளர்கள் யாரவாது...?

‘‘நான் தொடங்கியே சில மாதங்கள்தான் ஆகிறது. இருந்தாலும் எங்கள் போட்டியாளர்களுக்கும் எங்களுக்கும்ம் ஒரு பெரிய வித்தியாசம் இருக்கிறது. அங்கு ஒரு புகைப்படத்தின் விலையை அவர்கள்தான் (தளத்தை நிர்வகிப்பவர்கள்) தீர்மானிப்பார்கள். ஆனால், இங்கு, போட்டோவை எடுத்த கலைஞர்தான் அதன் விலையை தீர்மானம் செய்வார். தன்னுடைய படைப்பின் விலையைத் தீர்மானிக்க அளிக்கும் உரிமையே மிகப் பெரிய சுதந்திரம். அது மட்டுமின்றி, இங்கு ‘யூசர் லெவலிங் சிஸ்டம்’ என்னும் முறையும் உள்ளது. அதன்படி, பதிவேற்றம் செய்யப்பட்ட போட்டோ ஏற்றுக் கொள்ளப்பட்டால் 5 புள்ளிகள், தேர்வு செய்யப்பட்டால் 300 புள்ளிகள், கஸ்ட்டமர் ரிக்வஸ்ட்டை பூர்த்தி செய்தால் 600 புள்ளிகள், ஆர்டர் செய்யப்பட்டால் 1200 புள்ளிகள் என அவருக்கான புள்ளிகள் கொடுக்கப்பட்டு, புகைப்படக்காரரின் மதிப்பு கூடும்.’’

போட்டோ அல்லது வீடியோவின் விலை?

‘‘ஆரம்ப விலையாக 60 ரூபாயில் இருந்து அதிகபட்சமாக 65,999 ரூபாய் வரைக்கான கண்டென்ட்டுகள் இங்கு பல வெரைட்டிகளில் இருக்கின்றன.’’

இதில் உங்களுடைய முதலீடு?

‘‘நாங்கள் நான்கு பேரும் சேர்ந்து, சுமாரா 10 கோடி ரூபாய் வரை முதலீடு செய்திருக்கிறோம்.’’
என்னென்ன போட்டோகிராபி ஸ்டைலில் உங்களிடம் புகைப் படங்கள் உள்ளன?
‘‘அப்ஸ்ட்ராக்ட், விலங்குகள், ஃபேஷன், கடற்கரை, கட்டடங்கள், பிசினஸ், ஆர்கிடெக்ச்சர், செலிப்ரேஷன்ஸ், என்டர்டெயின்மென்ட், எஜுகேஷன், லேண்ட்ஸ்கேப், மைக்ரோ, மேக்ரோ, இன்டஸ்ட்ரி, ஃபுட் அண்ட் ட்ரிங்க்ஸ், வின்ட்டேஜ், ஷாப்பிங், ஸ்போர்ட்ஸ், டெக்னாலஜி, டிராவல், பார்டி, சயின்ஸ் .... இவ்வளவு ஏன் செல்பி வரை வந்து நிற்கிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்!’’

இதில் உங்களுடைய வருவாய்?

‘‘ஒரு போட்டோவின் விலையில் 25%  எங்களுக்கு கமிஷன் போக, மீதி 75% தொகை புகைப்படம் எடுத்தவருக்குப் போய் சேரும்.’’

இதுவரை எத்தனை போட்டோக்கள் விற்றிருக்கிறது?

‘‘75 வரை விற்றிருக்கிறோம்.’’

எத்தனை போட்டோகிராஃபர்ஸ் இருக்கிறார்கள்?

‘‘நாளுக்கு நாள் சைன்-அப் அதிகமாகிக் கொண்டேதான் போகிறது. இதுவரையில் 435 பேர் உள்ளனர். புகழ் பெற்ற போட்டோகிராஃபர்களான ஜி.வெங்கட் ராம், டி.நாராயணா, வருண் குப்தா ஆகியோரும் சைன்-அப் செய்துள்ளனர்.’’

உங்களுடைய வருமானம் குறிப்பிட முடியுமா?

‘‘கேட்க மிகவும் ஆச்சரியமாக இருக்கும். ஆனால் உண்மை. 5 லட்சம்!’’

ஒரு புரபஷனல் போட்டோகிராஃபர் ஏன் உங்களைத் (போட்டோ கான்சீர்ஜுக்கு) தேடி வரவேண்டும்?

“நல்ல புகைப்படத்துக்கென்று எந்த விதிமுறையும் கிடையாது. எடுக்கப்படும் எல்லாமே நல்ல புகைப்படம்தான்” என்று அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல புகைப்படக் கலைஞர் ஆடம் அன்செல் கூறுவார். நாங்கள் நல்ல புகைப்படம் யாரிடம் இருந்து வேண்டுமானாலும் வரலாம் என நம்புகிறோம். அதிக வருமானம் போட்டோகிராஃபருக்குக் கிடைக்கும்போது, அவர் தன் புகைப்படத்தின் தரத்தை உயர்த்திக் கொண்டே போக உதவும். அதுதான் ஹெல்த்தி பிசினஸையும், புகைப்படக்காரர்களையும் வளர்த்தெடுக்கும். இன்று டி.எஸ்.எல்.ஆர் வைத்துக் கொண்டு நம்மூரில் தெருவுக்கு ஒருவர் இருக்கிறார். அவர் எடுக்கும் புகைப்படங்களை அப்படியே மெமரி கார்டிலோ, கம்ப்யூட்டரிலோ வைத்திருந்தால் யாருக்கு லாபம்? அப்படியேதான் இருக்கும். அங்குதான் போட்டோ கான்சீர்ஜ் வருகிறது. இதில் அப்லோட் செய்தால், அது நாம் குறிப்பிடும் நேர்மையானத் தொகையை பெற்றுக் கொடுக்கும். நான்கு பேரின் பாராட்டையும் பெற்றுத் தரும்.’’

போட்டோகிராஃபர்கள் தேவை எனில் உங்கள் மூலம் அவர்களை புக் செய்யலாமா?

‘‘கண்டிப்பாக! கார்ப்பரேட் நிகழ்ச்சி, திருமண நிகழ்ச்சி, பிறந்தநாள், பாராட்டு விழா, விருது வழங்கும் விழா என அனைத்துக்க்கும்  நாங்கள் ஆர்டர்  எடுத்துக் கொள்வோம். நடந்து முடிந்த T20 உலகக் கோப்பையை முழு சீசனையும் எங்கள் போட்டோகிராஃபரில் ஒருவர் கவர் செய்தார்.

சிங்கப்பூர், ஹாங்காங், தாய்லாந்து, ஆஸ்திரேலியா ஆகிய இடங்களிலும் போட்டோ கன்சீர்ஜ் சேவையைத் தொடங்கும் பணிகளில் உள்ளோம். ஆன்ட்ராய்ட் மற்றும் ஐ.ஓ.எஸ்.க்ககவென்றே பிரத்யேக ஆப்ஸ்களை வெளியிடுவதற்கான பணிகளை விரைவுபடுத்தி வருகிறோம்” என்று முடித்தார் ஷெஃபாலி.

சென்னையில் இருந்துகொண்டு உலக அளவில் பேசப்படும் நிறுவனமாக இந்த போட்டோகன்சீர்ஜ் உயர வாய்ப்புண்டு என்பது மட்டும் தெளிவாக தெரிகிறது.