ரஜினியின் கபாலி.. பிசினஸ் & பிராண்டிங்.. பற்றி உங்களுக்கு தெரியுமா?

ரஜினியின் கபாலி.. பிசினஸ் & பிராண்டிங்.. பற்றி உங்களுக்கு தெரியுமா?

இன்று டாக் ஆப் த டவுன் என்றால் அது 'கபாலி'தான். தமிழ் சினிமா மட்டுமல்ல, இந்திய சினிமாவே இதுவரை கண்டிராத மிகப்பெரிய ஒரு எதிர்பார்ப்பு 'கபாலி' படத்துக்கு எற்பட்டுள்ளது. இந்த கபாலி பெயரில் நடைபெறும் பிராண்டிங் மற்றும் பிசினஸ் குறித்த விஷயங்களை துறைசார்ந்த வல்லுநர்களிடம் கேட்டோம்.
 
'கபாலி'  குறித்து சினிமா தயாரிப்பாளர் ஜி.தனஞ்செயனிடம் கேட்டோம். அவர்

"இந்திய சினிமாவில் சல்மான், ஷாருக், அமீர், கமல் என பல நிறுவனத்தின் தயாரிப்புகளை விளம்பரப்படுத்தியுள்ளார். தமிழ் சினிமாவில் சூர்யா 10 நிறுவனங்களின் தயாரிப்புகளையும், விஜய் 5 நிறுவனங்களின் விளம்பரப்படுத்தியுள்ளார். ஆனால், ரஜினிகாந்தைப் பொறுத்தவரை எந்த ஒரு நிறுவனத்திலும் விளம்பர தூதராக இதுவரை நடிக்காததால் அனைத்து நிறுவனங்களும் கபாலி படத்துடன் இணைந்துகொள்ள போட்டி போட்டன.

தற்போதைய நிலையில் தமிழ் சினிமாவில் ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா மற்றும் சிவகார்த்திகேயனைத் தவிர வேறு எந்த ஒரு நடிகர்களுக்கும் நிறுவனங்கள் செலவளிக்க தயங்குகின்றன. மற்ற நடிகர்களுக்கு ரூ.50 லட்சம் செலவளிப்பதற்குகூட யோசிக்கின்றன. காரணம் என்னவெனில் ரஜினி, கமல் போன்ற நடிகர்கள் மட்டுமே மக்கள் மனதில் எளிதில் ரீச் ஆகிறார்கள். ஆகையால் நிறுவனங்களும் இவர்களின் படத்தில் செலவளிக்க முன்வருகின்றன.

கபாலி பிசினஸ்!

கபாலி படம் ஆடியோ ரைட்ஸ் மூலாமாக ரூ.5 கோடி கிடைத்துள்ளது. இதன்பிறகு ஓவர்சீஸ் ரைட்ஸ் ரூ.30 கோடி, தெலுங்கு டப்பிங் & சாட்டிலைட் ரைட்ஸ் ரூ.30 கோடி, இந்தி டப்பிங் & சாட்டிலைட் ரைட்ஸ் ரூ.16 கோடி, வடமாநிலங்களில் தியேட்டர் ரைட்ஸ் தமிழ் & இந்தி ரூ.12 கோடி, தமிழ் சாட்டிலைட் ரைட்ஸ் ரூ.30 கோடி என கிடைத்துள்ளது. கேரளா & கர்நாடகா தியேட்டர் ரைட்ஸ் ரூ.15 கோடி, தமிழகத்தில் மட்டும் தியேட்டர் ரைட்ஸ் ரூ.65 கோடி என வியாபாரம் நடைபெற்றுள்ளது. இதில் சென்னை ரைட்ஸ் ரூ.8 கோடிக்கும், அதிகபட்சமாக செங்கல்பட்டு ரைட்ஸ் ரூ.13 கோடிக்கும் வியாபாரம் நடைபெற்றுள்ளது. ஆக ஒட்டுமொத்தமாக கபாலி படம் ரூ.203 கோடி ரூபாய்க்கு வியாபாரம் நடைபெற்றுள்ளது. இந்த படத்தின் செலவு மட்டும் ரூ.120 கோடி வரையிலும் இருக்கும்.

இதுதவிர இந்த படத்தின் ஓட்டுமொத்த பிசினஸ் என்பது ரூ.400 கோடி வரை நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது ஓவர்சீஸ் ரைட்ஸ் ரூ.30 கோடிக்கு வாங்கியுள்ளனர், அவர்களுடைய பிசினஸ் எதிர்பார்ப்பு ரூ.100 கோடி. இதேப்போல கேரளா & கர்நாடகாவில் ரூ.40 கோடிக்கு எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் மட்டும் ரூ.65 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது, இதில் ரூ.150 கோடி வரை வியாபாரம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
வசூல் சாத்தியமா?

சென்னையில் உள்ள ஒரு திரையரங்கில் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஒரு டிக்கெட் ரூ.500 ரூபாய் என விற்பனை செய்யப்பட்டுள்ளது. ஆக 200 டிக்கெட் ஒரு லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதுபோலத்தான் பல இடங்களில் பல்க் ஆக விற்பனை நடைபெறுகிறது. இப்படி இருக்கும் பட்சத்தில்தான் பணத்தை திரும்ப எடுக்க முடியும். ஆக ரூ.150 கோடி வியாபாரம் என்பது தமிழகத்தில் இந்த படம் வசூல் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தின் மூலம் தயாரிப்பாளருக்கு ரூ.200 கோடியும், கூடுதல் பிசினஸ் ஆக ரூ.200 கோடி என மொத்தம் ரூ.400 கோடி அளவில் பிசினஸ் நிச்சயம் நடக்கும்.

ரஜினி மேஜிக்!

கபாலி ஒரு மேஜிக், இது ரஜினியின் மேஜிக். இதை தெளிவாக யாராலும் விளக்க முடியாது. யாருமே பாலோவும் பண்ண முடியாது. இது ஒரு யுனிக் கேஸ் ஸ்டடி. ரஜினியின் முந்தைய படம் எதிர்பார்ப்பு இருந்தது ஆனால் ப்ளாப் ஆனது. ஆனால், இந்த படத்தில் ரஜினியைத் தவிர எந்த ஒரு பெரிய டெக்னீசியன் என சொல்லிக்கொள்ளும் அளவில் யாருமே இல்லை. இப்படிப்பட்ட ஒரு காம்பினேஷனில் இந்த படம் இவ்வளவு பெரிய அளவில் வரவேற்பு கிடைக்கிறது என்றால் ஆச்சரியமே. இதற்கெல்லாம் காரணம் ரஜினி மட்டுமே" என்றார்.

இவரைத் தொடர்ந்து சினிமாவில் எப்படி பிராண்டிங் பயன்படுத்தப்படுகிறது. ரஜினி என்ற ஒரு பிராண்ட் இடம் இருந்து கற்றுக் கொள்ள விஷயங்கள் என்ன என்பது குறித்து பிராண்ட் குறித்து ஆய்வு நடத்தும் டிரஸ்ட் ரிசர்ச் அட்வைசரி சிஇஒ என் சந்திரமவுலியிடம் கேட்டோம். அவர்

மூவி பிராண்டிங்!

"ரஜினி நடித்துள்ள கபாலி திரைப்படத்தில் மூவி பிராண்டிங் உள்ளது. ஒன்று இன் மூவி பிராண்டிங் அதாவது படத்திற்குள்ளேயே ஒரு தயாரிப்பை வைத்து அதை ரஜினி வரும் காட்சியில் பயன்படுத்துவது. உதாரணமாக ரஜினி கபாலி படத்தில் 'பவாண்டோ' குளிர்பானம் குடிப்பதாக காட்சியமைக்கப்பட்டு இருந்தால் அது இன் மூவி பிராண்டிங். படம் வெளிவந்த பிறகு ஏர் ஏசியா, ஏர்டெல், அமேசான், சாப் சிஜே போன்ற நிறுவனங்கள் இணைந்துள்ளன, இவை அவுட் மூவி பிராண்டிங்.

பிராண்டிங் ஏன்?

பிராண்டிங்கைப் பொறுத்தவரை ஒரு மார்க்கெட்டிங் டீமே உண்டு. நிறுவனங்களைப் பொறுத்தவரை வாடிக்கையாளர்களுடன் தொடர்பு ஏற்படுத்திக்கொள்ள பிராண்டிங் தேவைப்படுகிறது. இதைப்போலத்தான் சினிமாவிலும் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் எப்பொழுதுமே ஏர் இந்தியா விமானங்களில் மட்டுமே பயணிக்கின்றீர். ஆனால், உங்களை ஏர் ஏசியாவில் பயணம் செய்வதற்காக செய்யப்படும் யுக்தியே பிராண்டிங்.

ரஜினியிடம் இருந்து கவனிக்க வேண்டிய 4 விஷயங்கள்!

கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கரைப்போல, சினிமாவில் ரஜினிகாந்த் ஒரு பிராண்டிங். இந்த கபாலி பிராண்டிங்கிலிருந்து பல விஷயங்களை கற்றுக்கொள்ளலாம்.

1. வியாபாரத்தில் புதிது புதிதாக யோசித்து அதை செயல்படுத்த வேண்டும். எப்படி ரஜினியின் பழைய படங்களில் லுங்கி அணிந்து கொண்டு, பீடி குடித்துக்கொண்டு இருந்தவர், இப்போது ரோபோவாக நடித்து வெற்றி பெற்றாரோ, அதைப்போல வியபாராத்திலும் இன்னொவேட்டிவ் ஆக இருக்க வேண்டியது அவசியம்.

2. ரஜினிகாந்தின் திரைப்படம் தோல்வியடைந்தால் விநியோகஸ்தர்களுக்கு இழப்பீடு கொடுப்பதைப்போல,  உங்களுடைய வர்த்தகத்திலும் நேர்மையாகவும், நியாயமாகவும் இருந்தால் நீங்களும் வெற்றியாளராக மாறலாம்.

3. திரைப்படங்களில் ரஜினிகாந்த் இந்த வயதிலும் எவ்வளவு ரிஸ்க் எடுக்கிறாரோ, அதேப்போல வியாபாரத்திலும் ரிஸ்க் எடுப்பது முக்கியம். வியாபாரத்தில் எவ்வளவுக்கு எவ்வளவு ரிஸ்க் எடுக்கிறீர்களோ அவ்வளவுக்கு அவ்வளவு ரிவார்ட் உங்களுக்கு கிடைக்கும்.

4. சினிமாவில் ஒரே மாதிரியான கதையை செய்துக்கொண்டு இருந்த பல நடிகர்கள் தற்போது காலியாகிவிட்டனர். ஆனால், ரஜினி மற்றவர்களிடமிருந்து தன்னை வித்தியாசப்படுத்தி, தனக்கு என்று ஒரு வழியை ஏற்படுத்தி எப்படி வெற்றி பெற்று வருகிறார் என்பதை கவனியுங்கள். இதைப்போல உங்களுடைய வியாபாரத்திலும், நீங்கள் மற்றவர்களிடமிருந்து உங்களுடைய தயாரிப்புகளை வித்தியாசப்படுத்தினால் மட்டுமே சந்தையில் வெற்றி பெற முடியும்" என்றார்.
 
இன்று உலகம் முழுவதும் கபாலி திரைப்படம் வெளியாகி தியேட்டரில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது. இந்த படம் எப்படி இருக்கிறது, எவ்வளவு பிசினஸ் செய்கிறது என்பதை எல்லாம் தாண்டி, இவ்வளவு பெரிய அளவில் பிராண்டிங் செய்யப்பட்டது என்பதே ஆச்சரியத்துக்குரியது. ரசிகர்கள் இதை கொண்டாட வேண்டிய தருணம் என்றாலும் இந்த பிராண்டிங் ரகசியத்தை உங்களுடைய பிசினஸிலும் அல்லது வேலையிலும் பயன்படுத்தினால் நீங்களும் வெற்றியடையலாம்.