வேலையில் முன்னேறுவது எப்படி?

 வேலையில் முன்னேறுவது எப்படி?

இந்த வாரம் நாம் அறிமுகப்படுத்தும் புத்தகம் கரோலின் 101 - பிசினஸ் லெசன்ஸ் ஃப்ரம் தி அப்ரன்டீஸ் ஸ்ட்ரைட் ஷூட்டர்’ எனும் பிசினஸ் பாடங்கள் பற்றியது.

வேலைக்கான நேர்காணலை வெற்றிகரமாக எதிர்கொள்வது எப்படி, சம்பள உயர்வையோ அல்லது பதவி உயர்வையோ கேட்டுப்பெறுவது எப்படி, வேலையையும் வீட்டையும் சிறப்பாக நேரம் ஒதுக்கி நிர்வகிப்பது எப்படி, கடினமான ஒரு மேலதிகாரியைக் கையாள்வது எப்படி, தொழில்ரீதியாக நல்ல வாய்ப்புகளை எப்படி கண்டறிந்து முன்னேற்றத்துக்கு அதனைப் பயன்படுத்திக்கொள்வது, வெற்றிபெற எந்த மாதிரியான ஆடைகளை அணிவது, ஒரு குழுவில் நல்ல உறுப்பினராகவும், ஒரு குழுவுக்கு நல்ல தலைவியாகவும் இருப்பது எப்படி என்பதைப் பற்றியெல்லாம் விளக்கமாகவும்  சுவாரஸ்யமாகவும் எடுத்துச் சொல்லி இருக்கிறார் இந்தப் புத்தகத்தின் ஆசிரியர் கரோலின் கெப்ட்சர்.

குறிப்பாக, வேலைக்குச் செல்லும் பெண்கள் மேற்சொன்ன விஷயங்களை எப்படிக் கையாள்வது என்பதைத் தனது அனுபவத்திலிருந்தே புத்தகத்தின் ஆசிரியர் எடுத்துச் சொல்வது குறிப்பிடத்தக்க ஒன்று. கரோலின் கெப்ட்சர், ட்ரம்ப் கார்ப்பரேஷன் என்னும் ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் கோல்ப் கோர்ஸ் பிசினஸுக்கு சிஇஓ-வாக இருந்தவர்.

மிகச் சிறப்பான திறமையும் சிறப்பான செயல்திறனையும் பெற்றவர் கரோலின் என தனது பாஸ் டொனால்டு ட்ரம்ப்பினால் புகழப்பட்டவர். என்றாலும், வேலைக்குப் போகும் பெண்களும் பிசினஸில் இருக்கும் பெண்களும், 'நான் எப்படி இந்த நிலையை வந்தடைந்தேன் என்ற கேள்வியை என்னிடம் கேட்டு துளைத்தெடுக்கிறார்கள். அதனாலேயே நான் இந்தப் புத்தகத்தை எழுதினேன்’ என்கிறார் கரோலின்.



எடுத்த எடுப்பிலேயே, 'வாய்ப்பு என்பது ஒருவருக்கு ஒருமுறைதான் வரும். அதுவரும்போது எடுத்துக்கொள்ளாவிட்டால், மற்றொருமுறை என்பது கிடையவே கிடையாது’ என்ற கருத்துடன் ஆரம்பிக்கிறார்.

அதைத் தொடர்ந்து, 'உங்கள் கண்ணில்படும் ஒவ்வொரு விஷயத்திலும் என்ன இருக்கிறது என்று பார்க்காதீர்கள். அதில் உங்களுக்கு என்ன வாய்ப்பிருக்கிறது என்று பாருங்கள்’ என்கிறார்.

'உங்கள் உண்மையான தகுதி என்ன என்று வெளியே சொல்ல, ஒருபோதும் தயங்காதீர்கள்’ என்று சொல்லும் ஆசிரியர், 'உங்களால் மட்டுமே உங்களுடைய கற்றுக்கொள்ளும் திறனை மாற்றியமைக்க முடியும் என்பதையும் புரிந்துகொண்டு செயல்படுங்கள்.

மனிதர்களை நீங்கள் எடைபோட நினைத்தால், உங்களுடைய சொந்தத் தராசை வைத்து மட்டுமே எடை போடுங்கள். அடுத்தவர்கள் தராசில் போட்ட எடையை நம்பாதீர்கள்’ என்கிறார்.



'புதிய வேலைக்குச் செல்லும்போது அங்கு வேலையைப் புரிந்துகொள்ள ஒரு குருவைக் கண்டுபிடியுங்கள்’ என்று சொல்லும் ஆசிரியர், 'அடிக்கடி கேள்வி கேட்கிறோமே என்று நினைக்காதீர்கள். ஏனென்றால், நீங்கள் கேள்வி கேட்கும்போது நீங்கள் செய்பவற்றைப் பற்றித் தெரிந்துகொண்டு செய்ய விரும்புகிறீர்கள் என்பது அனைவருக்கும் விளங்கும்’ என்கிறார்.

'புள்ளிவிவரமெல்லாம் ஒரு பேக்-அப்புக்கு (Backup) தான். வெறுமனே புள்ளிவிவரத்தைத் தெரிந்துவைத்துக்கொண்டு காலத்தை ஓட்ட முயலாதீர்கள். செயல்திட்டம் என்ன என்று சொல்லி அலுவலகத்தில் முன்னேறப் பாருங்கள்’ என்கிறார்.

'வேலைக்கும் உங்களுக்கும் இருக்கும் தொடர்பில் மிக முக்கியமான அங்கம் வகிப்பது, உங்களுக்கும் உங்கள் பாஸுக்கும் நடுவே இருக்கும் புரிதல். சிலசமயம் மோசமான பாஸ் வந்துவிடலாம். இதில் மிகக் கொடுமையானது ஒரு முட்டாள் பாஸின் கீழ் வேலை பார்ப்பது’ என்று சொல்லும் ஆசிரியர், 'ஒரு மோசமான பாஸை மேனேஜ் செய்ய நீங்கள் உங்களை நன்றாக உணர்ந்திருக்கவேண்டும்’ என்கிறார். 'உங்களுடைய பாஸ் ஒரு முரட்டு மனிதன் என்றால், நீங்கள் அதைவிட முரட்டுத்தனமாக இருப்பீர்கள் என்று உலகம் புரிந்துகொள்ளும்’ என்கிறார்.

'உங்கள் பவரை மிகத் தேவையான, கட்டாயம் பயன்படுத்தியே ஆகவேண்டும் என்ற தருணத்தில் மட்டுமே பயன்படுத்த வேண்டும். பயன்படுத்தாமல் இருக்கும் பவர், இரண்டு மடங்குக்கு பவர்ஃபுல்லானதாகும்’ என்கிறார்.

'அடுத்து என்ன செய்யப்போகிறோம் என்று எதிர்பார்த்தே உங்கள் பணிகளைச் செய்யவேண்டும்’ என்று சொல்லும் ஆசிரியர், 'உங்கள் எல்லையை நீங்கள் தெளிவாகத் தெரிந்துவைத்துக்கொண்டால் மட்டுமே அந்த எல்லையைப் பாதுகாக்க முடியும்’ என்கிறார் கரோலின்.



'பிசினஸில் எமோஷனுக்கு (உணர்ச்சி வேகம்) இடம் கிடையாது’ என்று ஆணித்தரமாகச் சொல்லும் ஆசிரியர், 'நம்பிக்கைக் குறைவானச் சூழலில் மிகவும் நல்லதை நினைத்துச் செய்யப்படும் விஷயம்கூட சந்தேகத்துடன் பார்க்கப்படும். அதனால் குறைந்தபட்ச நம்பிக்கையைத் தக்கவைக்கப் பாடுபடுங்கள்’ என்கிறார் கரோலின்.

'யாராவது பொறுப்பை உங்களிடம் கொடுக்க முற்படும் போது தட்டிக்கழிக்காதீர்கள். துணிந்து எடுத்துக்கொள்ளுங்கள்’ என்று சொல்லும் கரோலின், 'ஒரு பெண்ணாக உங்களுடைய கேரியரை பிளான் செய்யும்போது இன்றைய மற்றும் எதிர்காலத்திய உங்கள் குடும்பச்சூழலுக்கு அது எந்த அளவில் சரிப்பட்டுவரும் என்று ஓரளவுக்காவது கணித்துச் செயல்படுங்கள்’ என்கிறார்.

'ஒரு வேலைக்குச் செல்லத் தயாராகும்போது, வீடு மற்றும் அலுவலகம் இரண்டையும் நிர்வாகம் செய்யவேண்டியிருக்கும் என்பதை உணர்ந்துகொள்ளுங்கள். சிலசமயம் அலுவலகத்தில் உபயோகிக்கும் நிர்வாகத்திறனை வீட்டிலும் பயன்படுத்த வேண்டியிருக்கும் என்பதையும் நினைவில்கொள்ளுங்கள்’ என்கிறார்.

'அதேபோல் குழந்தையா, வேலையா என்ற நிலையை நீங்கள் சந்திப்பீர்கள். அப்போது குழந்தை என்ற ஆணித்தரமான முடிவை எடுங்கள்’ என்கிறார். 'ஜெயிப்பது மட்டுமே வாழ்க்கையில் முக்கியமானதில்லை. எப்படி ஜெயிக்கிறோம் என்பதும் முக்கியமானதுதான் என்பதை நினைவில் வைத்துக்கொண்டு செயல்படுங்கள்’ என்று சொல்லி முடிக்கிறார் ஆசிரியர்.

வளர்ந்துவரும் பொருளாதாரத்தில் பெண்கள் வேலைக்குப் போவது தவிர்க்க முடியாததாகிவிட்டது. வேலைக்குச் செல்லும் பெண்கள் அனைவருமே கரோலினின் அனுபவங் களைத் தொகுத்துக் கொடுத்திருக்கும் இந்தப் புத்தகத்தைக் கையில் வைத்திருந்தால் சிறப்பாகச் செயலாற்றி முன்னேற்றபடியில் பயணிக்க முடியும் எனலாம்.