அறியவேண்டிய ரகசியங்கள்... பெஸ்ட் ஹெல்த் இன்ஷூரன்ஸ்!

அறியவேண்டிய ரகசியங்கள்... பெஸ்ட் ஹெல்த் இன்ஷூரன்ஸ்!


வேகமான வாழ்க்கை முறை, முறையற்ற உணவுப் பழக்கம், அதிக வேலைப்பளு காரணமாக ஏற்படும் மன அழுத்தம் ஆகியவற்றின் விளைவாக 40 வயதில் வர வேண்டிய நோய்கள் 30 வயதிலே வந்துவிடுகிறது. நோய்கள் வருவது ஒருபுறம் என்றால் மற்றொருபுறம் அதன் செலவுகள் என்பது நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு உள்ளது. அதாவது, ஒரு நாளைக்கு மருத்துவமனையில் தங்கி சிகிச்சை எடுக்க ரூ.5 முதல் - 10 ஆயிரம் வரை செலவாகிறது. இதுவே, இருதய நோய் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கும்போது சுமார் ரூ.5 லட்சம் வரை செலவாகும். இந்தத் தொகை மருத்துவமனைக்கு மருத்துவமனை வித்தியாசப்படும். இதைச் சமாளிப்பது எளிதான காரியம் இல்லை.

எனவே, மருத்துவ செலவுகளைச் சமாளிக்க ஹெல்த் இன்ஷூரன்ஸ் கட்டாயம் தேவை என்ற நிலையில்தான் அனைவரும் இருக்கிறோம். இந்தியாவில் 25-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசிகளை விற்பனை செய்கின்றன. அனைத்து நிறுவனங்களும் ஒரேமாதிரியான பாலிசிகளை விற்பனை செய்வதில்லை.

நிறுவனத்துக்கு நிறுவனம் வித்தியாசப்படுகிறது. எனவே, பாலிசியின் தன்மை என்ன, அந்த பாலிசி நம்முடைய மருத்துவ தேவைகளைப் பூர்த்திசெய்யுமா என்பதை ஒருமுறைக்கு பலமுறை ஆய்வு செய்யவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். பெஸ்ட் ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசியை தேர்வு செய்வதற்கு எதையெல்லாம் கவனிக்க வேண்டும் என்பதைப் பார்ப்போம்.

1. நிறுவனத்தின் தரம்!

ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுக்கும்முன், பாலிசி எடுக்கும் நிறுவனத்தின் தரத்தை ஆராய்வது முக்கியம். அதாவது, இன்ஷூரன்ஸ் நிறுவனத்தின் பின்னணி, நிர்வாக அதிகாரிகள் யார், அந்த நிறுவனத்தின் மருத்துவமனை நெட்வொர்க் எப்படி உள்ளது ஆகியவற்றைப் பார்ப்பது அவசியம். பாலிசி எடுக்க அந்த நிறுவனத்தின் தரத்தை அறிய வேண்டும்.

2. க்ளைம் செட்டில்மென்ட்!

நிறுவனத்தை தேர்வு செய்தவுடன், அந்த நிறுவனத்தின் க்ளைம் விகிதம் எவ்வளவு என்பதைப் பார்க்க வேண்டும். மேலும், ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசியை மட்டும் விற்பனை செய்யும் நிறுவனத்தை தேர்வு செய்வது நல்லது. அடுத்தது இன்ஷூரன்ஸ் நிறுவனமே க்ளைம்களை நேரடியாக விசாரித்து செட்டில் செய்கிறதா அல்லது வேறு நிறுவனங்களுடன் இணைந்து க்ளைம் செட்டில் செய்கிறதா என்பதைப் பார்க்க வேண்டும்.

3. நிபந்தனைகள், விதிவிலக்குகள்!

இந்த பாலிசியைப் பொறுத்தவரை, எதிர்பாராதவிதமாக நிகழும் விபத்து மற்றும் மருத்துவ சிகிச்சைகளுக்கு மட்டும்தான் கவரேஜ் கிடைக்கும். ஏற்கெனவே உள்ள வியாதிகளுக்கு கவரேஜ் பெறுவதற்கு காத்திருப்பு காலம் இருக்கும். இது, ஒவ்வொரு வியாதிக்கும் வித்தியாசப்படும். அதாவது, கண் சிகிச்சை,  குடலிறக்கம், சர்க்கரை நோய் போன்ற நோய்களுக்கு காத்திருப்பு காலம் இருக்கும். எந்த நோய்க்கு எவ்வளவு நாட்கள் காத்திருப்பு காலம் என்பதை பாலிசி எடுக்கும்முன் தெரிந்துகொள்வது நல்லது. மேலும், மருத்துவமனை யில் தங்கி சிகிச்சை எடுக்கும்போது மருத்துவ தேவைகள் தவிர்த்து சில பொருட்களை கூடுதல் வசதிக்காக பயன்படுத்த வேண்டியிருக்கும். அதாவது, தங்கியிருக்கும் அறையில் இருக்கும் டிவி போன்ற வசதிகளுக்கு இந்த பாலிசியில் கவரேஜ் பெற முடியாது.

4. வரம்புகள்!

ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசியில் மருத்துவர் கட்டணம், அறை வாடகை போன்றவற்றுக்கு பாலிசியின் கவரேஜ் தொகையில் குறிப்பிட்ட சதவிகிதம்தான் கவரேஜ் பெற முடியும். அதாவது, கவரேஜ் தொகையில் 1-1.5%தான் அறை வாடகைக்கு க்ளைம் செய்ய முடியும். மேலும், சில குறிப்பிட்ட நோய்களுக்கு சிகிச்சை பெறும்போது குறிப்பிட்ட அளவு தொகைக்குத்தான் க்ளைம் செய்ய முடியும். அதாவது, சிறுநீரக கோளாறுக்கு ரூ.20 ஆயிரம்தான் பாலிசியில் க்ளைம் கிடைக்கும் என வரையறை செய்து வைத்திருப்பார்கள். ஆனால், பெரும்பாலான நிறுவனங்கள் இதுபோன்ற வரம்பு எதுவும் இல்லை என்பார்கள். இதை உறுதி செய்துகொண்டபின் பாலிசி எடுக்கலாம்.

5. கோ-பேமென்ட்!

பெரும்பாலும், மூத்த குடிமக்களுக்கு எடுக்கும் பாலிசியில் இந்த கோ-பேமென்ட் இருக்கும். அதாவது,  மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை எடுக்கும் போது ஆகும் செலவில் குறிப்பிட்ட அளவு சதவிகித தொகைக்குதான் க்ளைம் கிடைக்கும். மீதமுள்ள தொகையை பாலிசிதாரர்தான் செலுத்த வேண்டியிருக்கும். இந்த கோ-பேமென்ட் சதவிகிதம் எவ்வளவு என்பது பாலிசியின் ஆவணத்தில் தெளிவாகத் தரப்பட்டிருக்கும். இது 20 -50% வரை இருக்க வாய்ப்புள்ளது.

6. பாலிசியை புதுப்பிக்கும் வயது!

இந்த பாலிசியில், ஒவ்வொரு ஆண்டும் பாலிசியை புதுப்பிக்க வேண்டும். ஆனால், பாலிசி எடுப்பவருக்கு குறிப்பிட்ட வயது வரை மட்டும்தான் இந்த வசதியை இன்ஷூரன்ஸ் நிறுவனம் அனுமதிக்கும். அதாவது, பாலிசிதாரரின் 70-80 வயது வரை மட்டுமே இந்த வசதி இருக்கிறது. இந்த வயதை தெரிந்துகொண்டு பாலிசி எடுப்பது நல்லது. ஏனெனில், வயது அதிகமாகும்போதுதான் வியாதிகள் அதிகம் வர வாய்ப்புள்ளது. சில இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் ஆயுள் முழுவதும் பாலிசியை புதுபித்துக்கொள்ளும் வசதியை வைத்துள்ளன.

7. மூத்த குடிமக்களுக்கான பாலிசி!

நீங்கள் 60 வயதுக்கு மேற்பட்டவர் எனில், மூத்த குடிமக்களுக்கான சிறப்பு பாலிசியைக் எடுக்கலாம். இதில் பாலிசியை வாழ்நாள் முழுவதும் புதுப்பித்துக்கொள்ளும் வசதி உள்ளது.

8. கவரேஜ் தொகை!

திருமணமாகாதவர் எனில், தனிநபர் பாலிசி எடுத்துக் கொள்ளலாம். திருமணத்துக்குப் பிறகு மனைவியை பாலிசியில் சேர்த்துக்கொள்ள முடியும். திருமணமானவர் எனில் மனைவி, குழந்தைகளைச் சேர்த்து ஃப்ளோட்டர் பாலிசி எடுத்துக்கொள்வது நல்லது. சில நிறுவனங்கள் ஃப்ளோட்டர் பாலிசியில் மூத்த குடிமக்களை சேர்த்துக்கொள்ளும் வசதியை வைத்துள்ளது. தனிநபர் எனில் ரூ.2-5 லட்சம் ரூபாய்க்கு, 4 பேர் கொண்ட குடும்பம் எனில் ரூ.5- 10 லட்சம் வரை கவரேஜ் எடுப்பது நல்லது. பாலிசியில் க்ளைம் செய்யாத வருடங்களில் இன்ஷூரன்ஸ் நிறுவனம் போனஸ் வழங்க வாய்ப்புள்ளது. இதை நிறுவனங்கள் வெவ்வேறு வழிகளில் வழங்குகிறது. அதாவது, சில நிறுவனங்கள் பிரீமியம் தொகையில் தள்ளுபடி வழங்குகிறது. இன்னும் சில நிறுவனங்கள் போனஸ் சதவிகிதத்துக்கு ஏற்ப கவரேஜ் தொகையை உயர்த்தி வழங்குகின்றன.

9. சிறப்பு வகை பாலிசிகள்!

சில நிறுவனங்கள் சிறப்பு வகை பாலிசி களை வழங்குகின்றன. அதாவது, சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கு கவரேஜ் செய்யும் வகையில் பாலிசிகளை வழங்குகிறது. மேலும், பெண்களுக்கு வரும் கர்ப்பப்பை புற்றுநோய், மார்பக புற்றுநோய்களுக்கு சிறப்பு பாலிசியை வடிவமைத்து வழங்குகிறது. இந்த பாலிசியை எடுக்கும்முன் இந்த நோய் ஒருவருக்கு வர வாய்ப்புள்ளதா என்பதைத் தெரிந்துகொண்டு எடுப்பது நல்லது.

10  பாலிசியின் விலை!

ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுக்கும் போது வெறும் பிரீமியம் செலுத்தும் தொகையை மட்டும் பார்க்காமல், அந்த பாலிசியில் எந்த வகையான கவரேஜ் கிடைக்கிறது என்பதைக் கவனித்து  எடுப்பதே புத்திசாலித்தனம். சில கூடுதல் வசதி இருக்கும் பாலிசிகளுக்கு சற்று கூடுதலான பிரீமியம் செலுத்துவதில் தவறில்லை.

ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசி மிக அவசிய மானது. எனவே, அது இல்லாமல் இருப்பது பெரும் ஆபத்து என்பதைப் புரிந்துகொள்வது நல்லது.


Click Here :
Register for Technical Analysis Training in Chennai
Click Here
Register for Basic Share Market Training

Share Market Training - Contact  91- 9841986753