சொந்த வீடு : கனவு இல்லத்துக்கு கச்சிதமான கைடுலைன்

சொந்த வீடு : கனவு இல்லத்துக்கு கச்சிதமான கைடுலைன்...


சொந்த வீடு... சொல்லும்போதே சுகமாய் இருக்கிறதல்லவா! பெருநகரங்களின் சந்துபொந்துகளில் நடையாய் நடந்து... நாயாய் அலைந்து... புரோக்கர்களுக்கு சுளையாய் கமிஷனைக் கொடுத்து புறாக் கூண்டு மாதிரி இருக்கும் வீடுகளில் வாழ்க்கையை ஓட்டிக்கொண்டிருக்கும் நடுத்தரவாசி ஒவ்வொருத்தருக்குள்ளும் தவிர்க்கவே முடியாத அழகான கனவாக இருப்பது சொந்த வீடு!

'எப்படியாவது, கடன்பட்டாவது ஒரு வீட்டைக் கட்டி முடிச்சிடணுங்க...’ என்று அலுப்பாய் சொல்லும் நாற்பத்தைந்து, ஐம்பது வயது சராசரி சம்பளதாரிகள் இங்கே ஏராளம்!

இன்றைக்கு லகரங்களில் சம்பளம் வாங்கும் சாஃப்ட்வேர் இளைஞர்கள் பலரும் பொறுப்பாக சொந்த வீட்டை வாங்கிய பிறகுதான் கல்யாணமே செய்துகொள்கிறார்கள். பெரிய அளவில் சம்பாத்தியம், அடுத்ததாக சொந்தமாக ஒரு சூப்பர் மாடர்ன் வீடு... என்பது இன்றைய ஹைடெக் இளைஞர்களின் கனவு.

சாதாரண வருமானக்காரர் என்றாலும், கூடுதல் சம்பளக்காரர் என்றாலும் பொதுவாக எல்லோருக்குமே வீடு குறித்த ஓர் அழகிய சித்திரம் இருக்கத்தான் செய்கிறது.

ஓய்வு, நிம்மதி, உத்தரவாதமான வாழ்க்கை, பாதுகாப்பு... இப்படி ஒரு மனிதனுக்கு ஒட்டுமொத்தமாய் இருக்கும் ஓர் உருவகம்தான் வீடு. ஒரு குடும்பம் என்கிற அமைப்பின் முக்கியமான விஷயமே ஒரு வீடுதானே!



மனிதர்கள் வீடுகளை நேசிப்பதை நிறுத்தி விட்டால் அமைதி என்பதே இருக்காது என்கிறார்கள் ஞானிகள். வீட்டின் நான்கு சுவர்கள்தான் நமது மனிதர்களுக்கு நிம்மதி. அப்படித்தான் வீடும் நம்மை வைத்திருக்கிறது. வீடு கிட்டத்தட்ட பறவையின் கூடு மாதிரி இருக்கிறது. மனிதர்கள் இருக்கும் வீடே அலங்காரமான வீடு. ஆனால், அப்படியான ஒரு சுகானுபவம் எத்தனை பேருக்கு வாய்த்து விடுகிறது?

வீடு ஒரு நரகமாகிவிடுகிறது வாடகைக்கு குடியிருப்பவனுக்கு. குலம், கோத்திரம் தொடங்கி எந்த வேலை, கம்பெனி, சம்பளம் எல்லாவற்றையும் வீட்டு உரிமையாளருக்கு சொல்லவேண்டும். வாடகை, முறைவாசல், தண்ணீர், கரன்ட் பில் என ஏறக்குறைய சம்பளத்தில் பாதியை வீட்டு ஓனர்களிடம் தந்துவிட்டு மாதக் கடைசியில் ஷேர் ஆட்டோவுக்கு சில்லறை காசுகூட இல்லாமல் கடன் வாங்கும் பரிதாபத்துக்குரியவர்கள்தான் நகர மக்கள் தொகையில் முக்கால்வாசிப்பேர்.

அடிக்கடி வீடு மாறுவதில் உள்ள நடைமுறை சிக்கல்களால்தான் எல்லாவற்றையும் சகித்துக்கொள்ளும் வாடகை வீட்டுக்காரர் ஒவ்வொருவருமே ஏங்கிக்கிடப்பது ஒரு சொந்த வீட்டுக்காகத்தான். 'முடிந்தமட்டிலும் ஒரு சொந்த வீடு இருந்தால் நல்லது; சொந்த வீடுன்னா எந்த தொந்தரவும் இல்லை’ என்பது வாடகை வீட்டுக்காரர்களின் புலம்பல்.

மனோகரனுக்கு 42 வயது. பதினைந்து வருடங்களில் பத்து வீடுகளுக்கு பல்லக்கு தூக்கி அலுத்துப்போனவர் எப்படியாவது சொந்தமாக ஒரு வீட்டைக் கட்டிவிடவேண்டும் என்று முடிவு கட்டினார்.

மனைவியின் நகைகள், வங்கிக் கடன் மற்றும் இதர சேமிப்புகளையும் போட்டு சமீபத்தில் புறநகரில் அரை கிரவுண்டு மனை வாங்கி 800 சதுர அடியில் ஒரு வீட்டை கட்டி முடித்து கிரஹபிரவேசம் வைத்தார். ஏதோ உலகத்தையே ஜெயித்துவிட்டதைப்போல அப்படியரு சந்தோஷம் அவருக்கு. உண்மையில் சொந்த வீடு கட்டுவது என்பது நடுத்தரவாசிகளுக்கு வாழ்நாளின் பெரும் சாதனையான ஒன்றுதான்.

'அட போங்கப்பா... இருபதாயிரம் சம்பளம் வாங்குற நான் 8,500 ரூபாய் வாடகை கொடுத்துக் கிட்டு இருந்தேன். இப்போ அதை வச்சு கடனை கட்டிட்டுப் போறேன்... எந்த தொல்லையும் இல்ல; வீடும் நமக்கு சொந்தமாயிருதில்லையா...’ என்று கால்மேல் கால்போட்டு நண்பர்களுடன் அவர் பேசுவதைப் பார்க்கும்போது அவருக்கான ஒரு நிம்மதியை அவர் அடைந்துவிட்டதாகத்தான் நினைக்கத் தோன்றுகிறது.

ஆனால், மனோகரனைப்போல எல்லோருக்கும் எந்த பிரச்னையும் இல்லாமல் சொந்த வீடு அமைந்துவிடுகிறதா என்றால், இல்லை. மனோகரன் சொந்த வீட்டுக்காக மனை வாங்க திட்டமிட்டதிலிருந்து அவர் சுமாராக இருநூறு லே-அவுட்களையாவது பார்த்திருப்பார். பஸ் ஏறி போய், சுட்டெரிக்கும் வெயிலில் நடையாய் நடந்து..! எத்தனை பேரிடம் விசாரணை, ஆலோசனை, டாக்குமென்ட்கள் சரியாக இருக்கிறதா என அவர் வி.ஏ.ஓ. அலுவலகம், வட்டாட்சியர் அலுவலகம், பதிவாளர் அலுவலகம் என அத்தனை இடங்களுக்கும் பலமுறை அலைந்து... மனை வாங்கி... நல்ல பில்டர் தேடி... மணல் செங்கல் மரம் என ஒவ்வொன்றிலும் நுணுக்கம் பார்த்து... அப்பப்பா, அவர் மெனக்கெட்டுக் கொண்டதைப்போல எத்தனை பேர் மெனக்கெடுகிறார்கள்..?



உதாரணத்திற்கு, சிவானந்தம் கதையைக் கேளுங்களேன். சென்னையில் வேலை பார்க்கும் அவர் மறைமலைநகர் தாண்டி ஒரு மனையை வாங்கினார். 'பக்காவான மனைங்க... முப்பது வருஷம் அனுபவம் இருக்கு; டாக்குமென்ட் இருக்கு; இவர் பேருலதான் வரிக் கட்டிட்டு இருக்காரு; பட்டா மட்டும்தான் இல்லை; ஆனா, கொஞ்சம் செலவு பண்ணினா ஈஸியா வாங்கிடலாம்; லே-அவுட்ல சொல்ற விலையை விட அஞ்சு லட்சம் கம்மியாவே முடிச்சிடலாம்...’ என உடன் வேலை பார்க்கும் ஒருவர் அழைத்துவந்த புரோக்கர் சொன்னதை நம்பி வாங்கினார். எப்படியோ பத்திரப் பதிவு முடிந்து பணத்தையும் கட்டிவிட்டார். மனை வாங்கி மூன்று வருடம் கழித்து, வீடு கட்டுவதற்கான அப்ரூவல் வாங்கப் போகும்போதுதான் வில்லங்கமே வெளிச்சத்துக்கு வந்தது.

அவர் வாங்கிய மனையின் பெரும்பகுதி முப்பது வருடத்துக்கு முன் நீரோடையாக இருந்து, பிறகு அரசின் கால்வாய் திட்டத்துக் காக ஒதுக்கப்பட்ட இடத்தில் வந்தது. மனையை விற்பனை செய்த நபர் இறந்து ஒரு வருடமாகிவிட்ட நிலையில், அவருடைய மகன் மீது வழக்குப் போட்டு... ஜவ்வாக இழுத்துக்கொண்டிருக்கிறது.

இப்படி சிக்கலில் சிக்கி ஆனந்தத்தை இழந்து தவிக்கும் எத்தனையோ சிவானந்தம்கள் இங்கே சொந்த வீட்டு கனவை நெஞ்சில் மட்டுமே சுமந்துகொண்டிருக்கிறார்கள்.

சென்னை கொரட்டூரில் வசிக்கும் பன்னீர் செல்வம் 15 வருடங்களுக்கு முன் சென்னைக்கு குடும்பத்தோடு குடிபெயர்ந்து வந்தவர். அப்போது ஓரளவு நல்ல வாடகை வீட்டில் அடிப்படை வசதிகளோடு வாழ்ந்தவர்தான். நாளாவட்டத்தில் வாடகையும் உயர உயர, குழந்தைகளின் படிப்பு செலவும் அதிகரிக்க, பெரிய வீடுகளில் வசித்தவர்கள் தற்போது சிறிய வீடுகள் பார்த்தால்தான் பொருளாதாரம் தாக்குப்பிடிக்க முடிகிறது என்கிறார்.

இவர்களைப் போன்று சொந்த வீட்டுக் கனவை சுமந்துகொண்டிருப்பவர்களா நீங்கள்..? சிக்கலில் சிக்கி மீண்டுவர போராடிக்கொண்டிருப்பவரா நீங்கள்..? அப்படியானால் இந்தத் தொடர் உங்களுக்காகத்தான். இந்தத் தொடர் உங்களை வாடகை வீட்டிலிருந்து சொந்த வீட்டிற்கு மாற்றப் போகிறது.

உங்களுக்கு ஒரு கனவு இல்லத்தை உருவாக்கப் போகிறது. உங்கள் சொந்த வீட்டிற்கான மனை வாங்குவது தொடங்கி, வீடு கட்டி குடிபோவது வரை உங்களை வழிநடத்தப் போகிறது. உங்களது தயக்கங்களை உடைத்து கைப்பிடித்து அழைத்துச் செல்லபோகிறது.

எந்த இடத்தில் மனை வாங்குவது, நமது பட்ஜெட் என்ன?, மனை வாங்கும்போது கவனிக்கவேண்டிய விஷயங்கள் என்ன, பத்திரங்களில் என்னென்ன விஷயங்கள் இருக்க வேண்டும், ஆவணங்கள் உறுதி செய்வது எப்படி என்பதில் தொடங்கி, வீட்டுக் கடன், வங்கி நடைமுறை, உங்கள் சொந்த வீட்டுக்கான ப்ளான் என ஒவ்வொன்றாக அலசப்போகிறோம்.

வீடு கட்டுவதில் உள்ள நுணுக்கங்கள், வீடு கட்டியவர்கள் சந்தித்த அனுபவங்கள், பில்டர்களின் ஆலோசனைகள், வீடு கட்டுவதற்கு வாங்கவேண்டிய அனுமதிகள் என நமது சொந்த வீட்டுக்காக சந்திக்கவேண்டிய அனைத்து வேலைகளையும் எப்படி செய்வது என்பதை உங்கள் கைப்பிடித்து அழைத்துச்செல்லும் சூப்பர் கைடுலைனாக இருக்கப்போகிறது இந்தத் தொடர்!

Click Here :
Register for Technical Analysis Training in Chennai
Click Here
Register for Basic Share Market Training

Share Market Training - Contact  91- 9841986753