விடா முயற்சி விசுவரூப வெற்றி! இவரைவிட சிறந்த எடுத்துக்காட்டு முடியுமா?

விடா முயற்சி விசுவரூப வெற்றி! இவரைவிட சிறந்த எடுத்துக்காட்டு உலகில் வேறு யாராவது இருக்க முடியுமா?

வாழ்க்கையில் பல நிலைகளில் அடிபட்டுக் கொண்டிருப்பவரா நீங்கள்? கவலை வேண்டாம். நிச்சயமாக மிகப் பெரிய வெற்றி உங்களைத் தழுவ காத்திருக்கிறது. யாருக்குத் தெரியும், அடுத்த 'எடிசன்' ஆகவோ, அடுத்த 'நியூட்டன்' ஆகவோ, ஏன், முதல் "நீங்கள்" ஆகவோ கூட இருக்கலாம்.

வாழ்வில் பல முறை தடுக்கி விழுந்து எழுந்து வெற்றியின் உச்சியை அடைந்தவர்கள் பலர். அந்தப் பட்டியலில் இவர் பெயரும் இருக்கிறது.

தாமஸ் ஆல்வா எடிஸன் (Thomas Alva Edison)

சிறு வயதில் மனநிலை பாதித்த மாணவன் என ஒதுக்கி வைக்கப்பட்டவர்தான் நம் வாழ்வில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறார். நாம் அன்றாடம் உபயோகிக்கும் பல பொருட்களின் அடிப்படை, இவரால் கண்டுபிடிக்கப்பட்டதுதான். இவர் பெயர், தாமஸ் ஆல்வா எடிசன். 10 வயதில் இருந்து தாயே ஆசிரியராக மாறினார். காரணம், இவரைப் பள்ளியில் இருந்து நீக்கி விட்டார்கள். வீட்டிலிருந்து இவர் அதிகளவு இயற்பியல் மற்றும் வேதியியல் புத்தகங்களைப் படித்தார்.

மூளை வளர்ச்சி குறைந்தவன்!

வாரத்திற்கு குறைந்தது 100 மணி நேரம் வேலை செய்துள்ளார். இவரை Workaholic எனக் கூறினார்கள். அந்த அளவு ஈடுபாட்டுடன் பைத்தியக்காரனைப் போல வேலை செய்துள்ளார். இவருடைய வாழ்வில் குறிக்கோள் ஒன்றே ஒன்றுதான். 10 நாட்களுக்கு ஒரு முறை ஏதேனும் புதிதாக கண்டுபிடிக்க வேண்டும். ஆனால், இவரது ஈடுபாட்டாலும், விடாமுயற்சியாலும் பல புதிய தயாரிப்புகளைக் கண்டுபிடித்து 5 நாட்களுக்கு ஒருமுறை தொடர்ந்து பேடண்ட் உரிமையைப் பெற்று வந்தார். இவரது வாழ்க்கையில் 1,093 பொருட்களுக்கு பேடண்ட் பெற்றுள்ளார். பேடண்ட் பெறாதது வேறு கணக்கு.

8,000 முறை தோல்வி!

இவர் storage batteryஐக் கண்டுபிடிக்கையில் 8,000 முறை தோல்வியைச் சந்தித்தார். செயற்கை ரப்பர் கண்டுபிடிக்கும் போது, 17,000 முறை முயற்சி செய்துள்ளார். இப்படி ஒவ்வொரு கண்டுபிடிப்பையும் பல முறை தோற்று தோற்றுதான் காண்டுபிடித்துள்ளார். இந்த கடும் முயற்சியால்தான் இவரது கண்டுபிடிப்புகள் பொருளாதாரம், அரசியல், சமூகம் எனப் பல நிலைகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு சிறந்த எடுத்துக்காட்டு மின்விளக்கு..!



மின்விளக்கு மிகப் பெரிய தொழிற் புரட்சியை ஏற்படுத்தியது. போர்க்காலங்களில் இரவைப் பகலாக மாற்றும் தந்திரத்தைச் செய்தது. மின்விளக்கால் பல நாடுகளும் அதிக மணிநேரம் உழைத்து, பொருளாதார ரீதியாக முன்னேறியது. இப்படி இன்று வரை மின்விளக்கின் தாக்கம் நம் வாழ்வில் அதிகம். இப்படி இவரின் ஒவ்வொரு பொருளும் ஒவ்வொரு தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.

விசுவரூப வெற்றி!

சிறுவயதில் இவரை ஆசிரியர் 'மூளை வளர்ச்சி குறைந்தவன்' எனக் கூறியதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல், பல தடைகளைத் தாண்டி தனக்கான பாதையை இவர் உருவாக்கிக் கொண்டதால், அந்த வழியில் இன்று நாம் கம்பீரமாக நடை போட முடிகிறது.

விடாமுயற்சி விசுவரூப வெற்றி என்பதற்கு இவரைவிட சிறந்த எடுத்துக்காட்டு வேறு யாரும் இருக்க முடியாது!