மியூச்சுவல் முதலீடு: லாபம் பார்ப்பது எப்படி?

மியூச்சுவல் முதலீடு: லாபம் பார்ப்பது எப்படி?


மியூச்சுவல் ஃபண்டில் குளோஸ்ட் எண்டட் திட்டங்களை தேர்வு செய்யும்போது, 'இத்தனை வருஷத்துக்குப் பிறகுதான் பணத்தை எடுக்கமுடியும்' னு முன்கூட்டியே தெரிவதால், அதில் குழப்பம் எதுவும் பெருசா இருக்காது.



ஆனா ஓப்பன் எண்டட் திட்டங்கள்ல நாம நிர்ணயிச்சுக்கிட்ட லாபத்தை அடைஞ்சாச்சுன்னா விற்றுவிட வேண்டியதுதான்.

பெரும்பான்மை பணத்தை பங்குச் சந்தையில் முதலீடு செய்கிற ஈக்விட்டி டைவர்சிஃபைட் மாதிரியான திட்டங்கள்ல பணத்தைப் போட்டிருந்தீங்கன்னா மார்க்கெட் விழும்போது யூனிட்டுகளை விற்க வேண்டாம். கொஞ்சம் காத்திருக்கலாம், தப்பில்லை. அதுமட்டுமில்லை, ஒரு வருஷத்துக்குள் விற்றால் லாபத்துக்கு 15%  வரி கட்டணும். அதையும் ஞாபகத்துல வச்சுக்கிடுங்க.

மியூச்சுவல் ஃபண்டில் பணம் போட்டபிறகு நமக்கு அனுப்பப்படும் அக்கவுன்ட் ஸ்டேட்மென்டில், 'ரிடம்ப்ஷன் ரிக்வெஸ்ட்' என்ற பகுதி இருக்கும். அதைப் பூர்த்தி செய்து மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் கிளையில் அல்லது ஏஜெண்ட்டிடம் கொடுத்தால் பணம் நம் வங்கிக் கணக்கில் வந்து விழுந்துவிடும்.

மியூச்சுவல் ஃபண்ட் யூனிட்டுகளை, முழுவதுமாகத்தான் விற்கணும்ங்கிற கட்டாயமில்லை. அதன் யூனிட்டுகளைக் கொஞ்சம் கொஞ்சமாகத் தவணை -முறையில் கூட விற்கலாம்.

டோனி வந்தாலும், காம்பீர் வந்தாலும் சச்சின்தான் இந்திய கிரிக்கெட்டில் எப்பவும் கிங். எல்லோரும் ஒப்புக்கொள்கிறோம். ஆனா, அடுத்த மேட்ச்சில் சச்சின் சதம் அடிப்பார்னு உத்தரவாதம் தரமுடியுமா..? முடியாது. அதேசமயம் அவர் திறமையாளர் என்பதிலும் சந்தேகமே இல்லை. இதேதான் மியூச்சுவல் ஃபண்டுக்கும். இங்கு வருமானத்துக்கு உத்தரவாதம் எதுவும் இல்லை.

சந்தையின் ஏற்ற- இறக்கங்கள், மியூச்சுவல் ஃபண்டையும் பாதிக்கத்தான் செய்யும். ஆனால், பெரும்பாலான ஃபண்டுகள், நீண்டகால அடிப்படையில் லாபத்தை கொடுத்திருக்கின்றன. நல்ல லாபம் தரக்கூடிய ஃபண்டுகளை கண்டுபிடிக்கிறதும், சரியில்லாததை ஒதுக்குவதும் வெளிப்படையானது.

கண்ணுக்கு முன்னாடி குவிஞ்சிருக்கும் வாய்ப்புகள்ல சிறந்ததை செலக்ட் பண்ற'தில்' நம்மைப் பொறுத்ததுதான்!

அடுத்து ஃபண்ட்டை செலக்ட் பண்ணணும். ஆனா அது அவ்வளவு லேசுப்பட்ட காரியமில்ல. நாற்பதுக்கும் மேற்பட்ட ஃபண்ட் கம்பெனிகள் நடத்திக்கிட்டிருக்கும் சுமார் 800-க்கும் மேற்பட்ட ஸ்கீம்கள்ல இருந்து நமக்கு ஏத்தது எதுனு கண்டுபிடிக்கணும்.

அடிப்படையில இரண்டு விதமா மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டுக்கு கிடைக்கும். இப்போதுதான் சந்தையில் அறிமுகமாகும் திட்டம். அதுக்கு என்.எஃப்.ஓ. (நியூ ஃபண்ட் ஆஃப்பர்) னு பெயர். இன்ணொண்ணு ஏற்கெனவே நடப்புல இருக்கிற திட்டம். இந்த வகைத் திட்டத்துல முதலீடு செய்ய-ணும்னா, மார்க்கெட்டுல அதோட யூனிட்டுக்கு என்ன மதிப்போ... முப்பது ரூபாயோ, நாற்பது ரூபாயோ, நூறு ரூபாயோ எதுவோ அதைக் கொடுத்து யூனிட்டுகளை வாங்கணும். புது ஃபண்டுன்னா அந்த யூனிட் மதிப்பு 10 ரூபாயா இருக்கும்.