வேண்டாம் எஃப்.டி; வேண்டும் மியூச்சுவல் ஃபண்ட்... முதலீட்டில் கலக்கும் பெண்கள்!

வேண்டாம் எஃப்.டி; வேண்டும் மியூச்சுவல் ஃபண்ட்... முதலீட்டில் கலக்கும் பெண்கள்!



பெண்களையும் பணத்தையும் எப்போதுமே பிரித்து பார்க்க முடியாது. பெண்கள் கையில் எப்போதுமே பணம் இருந்துகொண்டே இருக்கும். சிக்கனமாக செலவழித்து சேமித்த பணத்தை குடும்பத்தில் கஷ்டம் வரும்போது கேட்காமலே கொடுப்பதில் பெண்கள் கில்லாடிகள்.

முன்பு சமையலறையில் பருப்பு டப்பாவில் வைத்து பணத்தைச் சேமித்தார்கள் பெண்கள். பிற்பாடு வங்கி எஃப்.டி.யில் போட்டு வைத்தார்கள். இந்த மாதிரி செய்வதினால் பணம் பாதுகாப்பாக இருக்கும். பணத்தை பல மடங்காக பெருக்க வேண்டுமெனில், அதை முதலீடு செய்ய வேண்டும். ஆனால், முதலீடு செய்வதில் நம் பெண்களுக்கு நம்பிக்கை இல்லை. வெகு சில பெண்களே முதலீட்டின் மீது நம்பிக்கை வைத்திருக்கிறார்கள்.

எனினும், முதலீட்டின் மூலமாக தங்களுடைய கனவுகளை நிறைவேற்றிக் கொண்ட பெண்கள் பலர் இங்கு இருக்கிறார்கள். அப்படி முதலீட்டில் ஜெயித்த பெண்கள் சிலருடன் நாம் பேசினோம். முதலீட்டின் மூலம் அவர்கள் அடைந்த நன்மைகளை விளக்கமாக நம்மிடம் எடுத்துச் சொன்னார்கள்...

சென்னை மேடவாக்கத்தைச் சேர்ந்த ஸ்ரீவித்யாவை நாம் சந்தித்தோம். ‘‘நானும் என் கணவரும் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறோம். 2007-ம் ஆண்டுக்கு முன்புவரை எங்களுடைய முக்கிய முதலீடே ஃபிக்ஸட் டெபாசிட்தான். அதில் மட்டும்தான் நிலையான அதே சமயத்தில் நல்ல வருமானம் கிடைக்கும் என நம்பினோம். அந்தச் சமயத்தில்தான் என் அலுவலக நண்பர்கள் சிலர் மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் முதலீடு செய்ய ஆரம்பித்தார்கள். எனக்கு மியூச்சுவல் ஃபண்ட் குறித்த விஷயங்கள் எதுவும் தெரியாததால், அது சார்ந்த விஷயங்களைத் தேடி படிக்க ஆரம்பித்தேன். அப்படியும் எனக்கு அந்த முதலீட்டின் மீது பெரிய நம்பிக்கை ஏற்படவில்லை.



ஆனால், என் கணவர்தான் முதலீடு செய்து பார்ப்போம் என நம்பிக்கை கொடுத்தார். அந்த நம்பிக்கையின் பெயரில் ஃபிக்ஸட் டெபாசிட்டில் இருந்த பணத்தில் ஒரு பகுதியை 2007-ம் ஆண்டு மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் முதலீடு செய்ய ஆரம்பித்தோம்.

2010-ம் ஆண்டில் சொந்தமாக வீடு வாங்கலாம் என யோசித்தபோது, வீட்டுக் கடன் வாங்கலாம் என முடிவு செய்தோம்.

ஆனால், வீடு வாங்கத் தேவையான முழுத் தொகையும் கடனாக வாங்கினால் இஎம்ஐ அதிகமாகச் செலுத்த வேண்டிய சூழ்நிலை உருவாகும் எனச் சற்று தயங்கினோம். அப்போதுதான் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு குறித்த ஞாபகம் வந்தது. அந்த முதலீட்டை வீடு வாங்குவதற்கு பயன்படுத்திக் கொள்ளலாம் என முடிவு செய்து, எவ்வளவு தொகை சேர்ந்திருக்கிறது என்று பார்த்தோம். எங்களுடைய முதலீடு அதிக வளர்ச்சி அடைந்திருந்ததைக் கண்டு நாங்கள் மகிழ்ந்து போனோம். நாங்கள் ரூ.5 லட்சம் முதலீடு செய்திருந்தோம். அது 2010-ம் ஆண்டு ரூ.7 லட்சமாக இருந்தது. அந்தப் பணத்தை வீடு வாங்க பயன்படுத்திக் கொண்டோம். நாங்கள் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்த பணம் அப்படியே ஃபிக்ஸட் டெபாசிட்டில் இருந்திருந்தால், இவ்வளவு வருமானம் கிடைத்திருக்காது. இப்போது எங்களின் முதலீட்டுத் திட்டங்களில் முதலில் இருப்பது மியூச்சுவல் ஃபண்ட்தான்” என்றார்.

ஆனால் கோவையைச் சேர்ந்த பிரியதர்ஷினி தனது எதிர்கால தேவைக்காக தன்னுடைய முதல் சம்பளத்திலிருந்து முதலீடு செய்ய ஆரம்பித்துள்ளார். ‘‘நான் எம்பிஏ பட்டதாரி என்பதால், பங்குச் சந்தை சார்ந்த முதலீட்டுத் திட்டங்கள் குறித்து ஓரளவுக்கு எனக்குத் தெரியும். முதலீடுகள் குறித்த அனைத்தையும் பாடப் புத்தகத்தில் மட்டுமே படித்திருந்ததால், அதனுடைய உண்மை நிலை எப்படி உள்ளது என்பதை தெரிந்து கொள்வதற்காகவே மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்ய ஆரம்பித்தேன். முதலீடு செய்ய துவங்கிய ஓராண்டில் சந்தை இறங்க ஆரம்பித்தது. அப்போது என்னுடைய பணம்  போய்விடுமோ என்ற பயம் உருவானது.

ஆனால், சந்தை மீண்டும் உயர ஆரம்பித்ததும் நம்பிக்கை உருவானது. அதிலிருந்து சந்தை இறங்கும் சமயத்தில் எல்லாம் என்னுடைய முதலீட்டை அதிகப்படுத்துவேன். மேலும், இப்போது எஸ்ஐபி மூலமாக மேற்கொள்ளும் முதலீடு என்னுடைய ஓய்வுக்கால தேவைகள் மற்றும் என்னுடைய திருமணத்துக்கு பிறகு குழந்தைகளின் படிப்பு தேவைகளுக்கு பயன்படுத்தும் வகையில் முதலீட்டைத் திட்டமிட்டிருக்கிறேன். இப்போது என்னுடைய முதலீடுகள் அனைத்துமே லாபத்தில் உள்ளது’’ என்றார்.

பிரியாவை தொடர்ந்து   நாம் பேசியது சாவித்ரியுடன். இவர் ஒரு தனியார் நிறுவன ஊழியர். ‘‘நான் வேலை பார்க்கிறேன் என்பதால் என் சம்பளத்தில் ஒருபகுதியை எப்படியாவது சேமிக்க முடிவு செய்தேன். ஆரம்பத்தில் எதில் முதலீடு செய்வது என்பது தெரியாமல் கையில் இருந்த பணத்தில் தங்கம் வாங்குவது, ஃபிக்ஸட் டெபாசிட் போடுவது என இருந்தேன். அதன்பிறகு பங்குச் சந்தையில் முதலீடு செய்வது குறித்து யோசிக்கும்போது, பங்குச் சந்தை  ரிஸ்க் நிறைந்தது என்பதை தெரிந்துகொண்டேன். பங்குச் சந்தையைப் போலவே நல்ல லாபம் தரக்கூடிய வேறு முதலீட்டுத் திட்டங்கள் ஏதாவது இருக்கிறதா எனத் தேட ஆரம்பித்தேன்.

அந்தச் சமயத்தில்தான் மியூச்சுவல் ஃபண்ட் குறித்து என்னுடைய புரோக்கிங் நிறுவனம் கூறியது.மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு குறித்த பல விஷயங்களைத் தெரிந்துகொண்டு முதலீடு செய்ய ஆரம்பித்தேன். பத்து வருடங்களாக என்னுடைய முதலீடுகள் அனைத்துமே லாபத்தில் இருக்கிறது.

கடந்த வருடம் என் மகனுக்கு உபநயனம் (பூணூல் கல்யாணம்) நடத்தலாம் என முடிவு செய்தோம். அந்த செலவுகளுக்கு என்ன செய்வது என என் கணவர் யோசிக்கும் போது என் முதலீட்டில் இருந்து தருகிறேன் என கூறினேன். என் முதலீட்டின் மூலமாக கிடைத்த லாபத்தை மட்டும் எடுத்து விழாவை சிறப்பாக நடத்தி னோம். நான் மாதாமாதம் முதலீடு செய்த தொகை அப்படியே உள்ளது; அதிலிருந்து கிடைத்த லாபம் நான் எதிர்பார்த்தைவிட அதிகமாக உள்ளது  என்பதை அப்போதுதான் புரிந்துகொண் டேன். அதன் பிறகு என் முதலீட்டுத் தொகையை அதிகமாக்கி யுள்ளேன்” என்றார்.

இத்தனை நாளும் தங்கம், எஃப்.டி. என்று மட்டுமே இருந்தது போதும். இனியாவது நம் ரிஸ்க் அறிந்து, எதிர்காலத் தேவைகளை நிறைவேற்றும் மியூச்சுவல் ஃபண்ட் போன்ற முதலீடுகளை தேடிச் செல்வோம்.