தோல்விகள் கொடுத்த வெற்றி - அருண் விஜய் நடிகர்

தோல்விகள் கொடுத்த வெற்றி - அருண் விஜய் நடிகர்நான் சினிமாவுக்கு வந்தபோது எனக்கான மெச்சூரிட்டி குறைவுதான். எப்படி நடித்தால் படம் ஓடும், எந்த மாதிரியான கதைகளை தேர்வு செய்யவேண்டும் என்று எனக்கு ஆராயத் தெரியவில்லை. என் வளர்ச்சியில் என் அப்பா கவனம் செலுத்தினார் என்றாலும் வெற்றியின் அடிப்படை எனக்குப் பிடிபடாமலேயே இருந்தது. நடிப்பு, நடனம், சண்டை என சினிமாவுக்குத் தேவையான அம்சங்களை சரியாகத்தான் தந்தேன். ஆனால், நல்ல நடிகனாக முன்னுக்கு வரமுடியவில்லை. எவ்வளவு உழைப்பை கொடுத்தாலும் சரியான அங்கீகாரம் இல்லை.

திரைத் துறையின் சூட்சுமங்களைக் கற்றுக்கொள்ள எனக்கு சில காலம் பிடித்தது. நடிக்க வந்த காலந்தொட்டு இதுவரை 18 படங்கள் மட்டுமே செய்திருக்கிறேன். ஆனால், என்னோடு சமகாலத்தில் வந்த நடிகர்கள் இன்று முன்னணி நட்சத்திரங்களாகி விட்டனர். இதை பார்க்கும் எனக்கு நான் இன்னும் வேகமாக ஓடவேண்டும் என்கிற உந்துதலைக் கொடுக்கிறது.
சினிமாவுக்கு வந்துவிட்டோம், இதில் சாதிக்காமல் ஓயக்கூடாது என்கிற மனநிலை எப்போதும் இருந்து கொண்டே இருந்தது. அந்த வகையில் எனக்கான திருப்புமுனையாக பாண்டவர் பூமி படம் அமைந்தது. அதற்கு பிறகுதான் எனக்கான கதைக் களத்தை சரியாக அமைத்துக்கொள்ள ஆரம்பித்தேன்.
தோல்வி என்று எதுவும் கிடையாது, நாம் வெற்றியை நோக்கி ஓடுகிறோம் என்கிற மனநிலையில் எப்போதும் ஓடிக்கொண்டே இருக்க வேண்டும். கண்டிப்பாக நம் உழைப்புக்கான பலன் ஒரு நாள் கிடைக்கும் என்கிற நம்பிக்கை இருந்தது. நமது திறமையின் மீது நமக்கு நம்பிக்கை வரும்போதுதான் வெற்றியும் தேடி வரும். இந்த காலகட்டங்களில் வந்த படங்கள் அந்த நம்பிக்கையை தயாரிப்பாளர்களுக்கு கொடுத்தது.
கடைசியாக வந்த 'தடையறத் தாக்க' திரைப்படம் எனக்கு எல்லா மட்டத்திலும் சிறந்த நடிகன் என்று பெயர் வாங்கி கொடுத்தது. எனது திரையுலக வாழ்க்கையின் மிகப் பெரிய திருப்புமுனையாக அமைந்தது. இதன் இயக்குநர் ஏற்கெனவே எடுத்த ஒரு படம் தோல்வி. எனக்கு வெற்றி கொடுத்தாக வேண்டிய கட்டாயம். அவர் எனது உழைப்பின் மீது நம்பிக்கை வைத்தார். நான் அவரது திறமையின் மீது நம்பிக்கை வைத்தேன்.