ஒரு போட்டோகிராபரின் வெற்றிக் கதை! பாண்டியராஜன்.

‘‘வித்தியாசமான அணுமுறைதான் என்னைத் தொழிலில் ஜெயிக்க வைத்தது!’’

ஒரு போட்டோகிராபரின் வெற்றிக் கதை! பாண்டியராஜன்.


இளம் வயதில் வருகிற உண்மைக் காதல், சிலருக்கு நல்ல வெற்றிப் பாதைகளை வகுத்து தரும் என்பதற்கு நல்லதொரு உதாரணமாக இருக்கிறார் க.பாண்டியராஜன். சாத்தூரில் துருவன் மாடலிங் ஸ்டுடியோ வைத்திருக்கும் அவரைச் சந்தித்தோம். ஓர் திருமண புகைப்படத்தை கணினியில் எடிட் (Edit) செய்து கொண்டே நம்முடன் பேசினார் அவர்.

“எனக்கு சொந்த ஊர் சாத்தூர் அருகிலுள்ள சத்திரப்பட்டி எனும் கிராமம். என் அப்பா ஒரு டிரைவர். என் ஐந்தாம் வகுப்பு கோடை விடுமுறையில் என் அம்மா இறந்துவிட்டார். பின் வறுமையின் காரணமாக ஊரில் கோயில் மணி தயாரிக்கும் ஒரு கம்பெனியில் சிறிது காலம் வேலை பார்த்தேன். பின் கேரளாவுக்கு கடலை மிட்டாய் கம்பெனிக்கு சென்றுவிட்டேன். அங்கு காலை ஐந்து  மணியிலிருந்து இரவு 10 மணி வரை வேலை இருக்கும். பல கஷ்டங்களை நான் அப்போது அனுபவித்தேன்.

என் 16 வயதில் தந்தைக்கும் எனக்குமான கருத்து வேறுபாட்டில் தனி வீடு பிடித்து சென்றுவிட்டேன். பின்பு, பணம்தான் வாழ்க்கை போல என நினைத்து பல வேலைகளை செய்தேன். காலை ஐந்து மணிக்கு எழுந்து சாப்பாடு செய்து, ஆறு மணிக்கு முறுக்கு கம்பெனிக்கு சென்றுவிடுவேன். அங்கு காலை முறுக்கு உற்பத்தி செய்வோம். மதியம் 2.30 மணியிலிருந்து கடைக்கு விநியோகிக்க சென்றுவிடுவேன். இரவு 7.30 மணிக்கு தீப்பெட்டி ஆபிஸுக்குச் சென்று இரவு 12 மணி வரை வேலை பார்ப்பேன்.

எனக்கென்று எந்த சொந்தபந்தமும் இல்லை. என் மீது பாசம் காட்ட யாருமில்லாதபோது என் மீது தோழமை காட்டினார்க இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத் தோழர்கள். அங்குதான் பணம் மட்டுமே வாழ்க்கை இல்லை என்பதைத் தெரிந்துகொண்டேன்.

பின்பு, பிரியா ஸ்டுடியோவுடன் எனக்குத் தொடர்பு கிடைத்தது. அங்கு கார்த்தி அண்ணன்தான் என்னைப் புரிந்துகொண்டு, என் ஸ்டுடியோ வாழ்க்கைக்கான அடிதளத்தை அமைத்துக் கொடுத்தார். எனக்குப் புகைப்படம் எடுப்பதற்கும், நல்ல உடை அணிவதற்கும் கற்றுக் கொடுத்து என் வாழ்வை மாற்றிய மறக்க முடியாத நபர்.

சின்னச் சின்னதாக நான் செய்த வேலைகள் போக மீதமுள்ள நேரத்தில் வாலிபர் சங்கத்துக்காக செலவழித்தேன். அப்போது, வாலிபர் சங்கத்தின் பெண் தோழியராக இருந்த பாண்டிசெல்வியின் நட்பு எனக்குக் கிடைத்தது. பின்பு அது காதலாக மாறியது. அதுவரை எனக்கென்று யாருமில்லை. இனி என் காதலிக்காக சொந்தத் தொழில் தொடங்கி சம்பாதிக்க வேண்டும் என்று நினைத்தேன்.

2009-ல் என் சொந்த பணம் ரூ.1500 மற்றும் தோழர் கருணாமூர்த்தியிடம் ரூ.25,000 கடன் பெற்று, கேமிரா வாங்க நினைத்தேன். என் நண்பர் ஆண்டனிதான் எனக்கு கேமரா வாங்கித் தர உதவினார். நிக்கான் கேமிராவின் விலை ரூ.32,000 என்றார்கள். அவ்வளவு என்னிடம் இல்லை என்றதுடம், நண்பர் ஆண்டனி, மீதப் பணத்தை தந்து கேமிராவை வாங்கித் தந்தார்.

2010-ல் தனியாக ஒரு அறை எடுத்து, நிறைய நண்பர்களின் உதவியுடன் கல்யாண ஆர்டர்கள் எடுத்து அதை சரியாக செய்து கொடுத்தேன். இந்த சமயத்தில் என் காதலி பாண்டிசெல்வி, மதுரை சட்டக் கல்லூரியில் சட்டம் படிக்கச் சேர்ந்தாள். ஃபோட்டோ பிரிண்ட் போடுவதாகச் சொல்லி அவளைப் பார்க்க அடிக்கடி செல்வேன்.

நான் எடுத்த போட்டோக்களை குளோ (GLO) மற்றும் தினேஷ் (Dhinesh) கலர் லேப் சென்று பிரிண்ட் போடச் செல்வேன். அங்குதான் பல வகையான ஃபோட்டோக்களை பார்த்து என் புகைப்படம் எடுக்கும் முறையினைக் கற்றுக்கொண்டேன்.

2011-ல் தனி ஸ்டுடியோ சாத்தூரில் ஆரம்பித்தேன். அங்கிருந்த தொழில் போட்டி என்னை மேலும் வளர்ச்சி அடைய செய்தது. என் காதலி கல்லூரிப் படிப்பு முடித்தபின், இனி அவளைப் பார்க்க முடியாதோ என்று நினைத்தேன். உடனே, சிவகாசியில் 2015-ன் ஆரம்பத்தில் தனி ஸ்டுடியோ ஆரம்பித்தேன்.

சிவகாசியில் ஸ்டூடியோ ஆரம்பித்தபிறகுதான் எனக்குப் பெரிய ஆர்டர்கள் வர ஆரம்பித்தது. இதன்பிறகுதான் என் ஸ்டூடியோ நியூ ஜெனரேஷன் ஃபோட்டோகிராபியாக (New generation photography) மாற்றம் அடைந்தது. எனக்கு வரும் திருமண போட்டோக்களை வித்தியாசமாக எடுத்துத் தந்தேன். வித்தியாசமான அணுகுமுறைதான் நம்மை மற்றவர்களிடமிருந்து வேறுபடுத்திக் காட்டும். இன்று பலரும் என்னைத் தேடி வருகிற அளவுக்கு என்னை நான் நிலைநிறுத்திக் கொண்டிருக்கிறேன். என்னை ஜெயிக்க வைத்தது என் காதல்தான்’’ என்று முடிக்கிறார் பாண்டியராஜன்.

செய்யும் தொழிலை வித்தியாசமாக,  ரசித்து செய்தால் நிச்சயம் வெற்றிதான் என்று சொல்லும் இவர் இன்னும் புதிய உயரத்தை எட்டட்டும்!