ஸ்டார்ட்அப் தொடங்க இந்தக் குணம் அதிஅவசியம் StartUpBasics

ஸ்டார்ட்அப் தொடங்க இந்தக் குணம் அதிஅவசியம்  StartUpBasicsகனவு காணுங்கள் என்பார் அப்துல்கலாம். எல்லையை தாண்டி கனவு காணுங்கள் என ஒரு படி அதிகமாக சொல்லும் ஸ்டார்ட்அப் உலகம். அந்த உலகத்தில் போகத் துடிக்கும் எவரும் கனவிலும் நிகழாத காரியத்தை மேற்கொள்ள நேர்ந்தாலும் “இது நடக்க வாய்ப்பே இல்லை” என்று சொல்வது தவறு. இது நடக்க இன்று தொழில்நுட்பம் போதவில்லை என்று தான் சொல்ல வேண்டும். அப்படி யாரும் யோசிக்காத அல்லது யோசிக்க தயங்கிய ஒரு ஐடியாவை வெற்றிகரமாக துணிந்து செய்துகொண்டிருப்பவர் தான் எலன் மஸ்க் (Elon musk).

அப்படி எல்லைத் தாண்டிய சிந்தனையை ஒருவர் பெற என்ன செய்ய வேண்டுமோ அதை சிறுவயதிலேயே இயல்பாக செய்து கொண்டிருந்தார் எலன். ஆம் ஒரு நாளைக்கு பத்து மணி நேரத்திற்கும் அதிகமாக படித்தார். பாடபுத்தகங்களை அல்ல அறிவியல், பொறியியல் புத்தகங்களை. அவர் தந்தை தென்னாப்ரிக்காவில் ஒரு பொறியியல் வல்லுநர், தாய் ஒரு விளம்பர மாடல். அப்பாவின் நூலகத்தில் வாங்கி குவித்த எல்லாவிதமான புத்தகங்களையும் படித்து முடித்தார் எலன். அந்த புத்தகங்கள் எல்லாம் படித்து தீர்ந்து போனபோது தடித்தடியான Encyclopedia புத்தகங்களை எடுத்து வாசித்தார். இதெல்லாம் அவரது பத்து வயதில் நடந்திருக்கிறது.

பெற்றோர்கள் பிரிகிறார்கள். இவர் தந்தையின் வளர்ப்பில் செல்கிறார். பள்ளியில் பயங்கர சுட்டி. படிப்பில் அதைவிட கெட்டி. BASIC என்ற கணினி மொழியை மூன்றே நாட்களில்கற்று முடிக்கிறார். ஒரு குட்டி வீடியோ கேமை உருவாக்கி அதை 500$க்கு விற்றும் விடுகிறார்

சம்பாதித்த காசில் மீண்டும் புத்தகத்தை தான் வாங்குகிறார். இம்முறை Hitchhikker’s Guide to the Galaxy. அது ஒரு காமிக் நாவல். எண்ணற்ற அறிவியல் கேள்விகளை எழுப்பி அதற்கு விடை கண்டுபிடிக்கும் அதிபுத்திசாலிகள் உலவும் கதை. படித்து முடித்தபோது மனித இனத்தை பூமியின் பேரழிவில் அழியவிடாமல் காக்கவேண்டும் அதுவே தனது லட்சியம் என்று முடிவெடுக்கிறார். அந்த 14 வயதில் அவர் மனதில் விழுந்த அந்த விதை பின்னால் ஒரு பெரும் தனியார் விண்வெளி நிறுவனத்தை கட்டமைக்க காரணமாகிறது. நம்ப முடியவில்லையா? நம்பித்தான் ஆக வேண்டும்.

15 வயது ஆனபோது தந்தை படித்தது போதும் வேலைக்கு செல் என்கிறார். நான் வீட்டை விட்டு செல்கிறேன் என்று அம்மாவின் கனடா குடியுரிமை பயன்படுத்தி கனடா கிளம்பிவிட்டார் எலன். கனடாவில் உறவினர் வீட்டில் தங்கி வேலைக்கு சென்றுகொண்டே படிப்பையும் தொடர்கிறார். கடுமையான நாட்கள். இருந்தும் கல்லூரியில் இயற்பியல் மற்றும் பொருளாதாரத்தில் இரட்டை பட்டப்படிப்பு படித்து தேறுகிறார்.

இதற்கு நடுவில் குட்டி குட்டியாய் பல முயற்சிகள் . சிறிதுகாலம் ஒரு வங்கியில் உதவியாளர் வேலை. பின்னர் சிறிய அறையில் இருந்தவாறே கம்ப்யூட்டர்களை விற்பனை செய்கிறார். கல்லூரியில் படிக்கும் போதே அவரது அறையில் சிறிய அளவில் பார் நடத்துகிறார். இந்த தேடல் தான் ஒரு ஸ்டார்ட்அப்பை தொடங்கவிரும்பும் எவருக்கும் உள்ள அடிப்படையான குணம். எல்லோரும் செல்லும் பாதையில் இருந்து விலகி புதுப்பாதையை பயணத்தை தேர்ந்தெடுக்க துணிந்தவர்கள் மட்டுமே வருங்காலத்தை செதுக்குகிறார்கள்.

ஒருநாள் தன் சகோதரனுடன் பேசிக் கொண்டிருக்கும்போது ஒரு ஐடியா தோன்றுகிறது. அதை பேசிப்பேசி வளர்த்தெடுக்கிறார். அந்த ஐடியா பிறந்தவுடன் புகழ்பெற்ற Stanford பல்கலைகழகத்தில் படித்துக் கொண்டிருந்த Ph.D படிப்பை விட்டு பாதியில் விலகி Zip2 என்ற ஸ்டார்ட்அப்பை தொடங்குகிறார். அன்றைய இணையத் தேவையான தேடுபொறி தான் இவர்கள் கான்செப்ட்.

தந்தையின் 28000 டாலர் பணத்துடன் தொடங்கி, மூன்று மாதங்கள் ஆபிசை விட்டு நகராமல் அதை வளர்க்கிறார். உழைப்பு வீண் போகவில்லை. 3 மில்லியன் டாலர்கள் முதலீடு கிடைக்கிறது. மூன்றாண்டு காலம் பல ஏற்ற இறக்கங்களுடன் நகர்கிறது. இவர்களின் ஸ்டார்ட்அப்பை Compaq Computers விலைக்கு வாங்கி Altavista என்ற தேடுபொறியுடன் இணைக்கப்படுகிறது. (பின்னர் இந்த ஆல்டாவிஸ்டா யாகூவுடன் இணைந்தது வேறு கதை) நிறுவனம் விற்கப்பட்டதில் இவரின் பங்கு 22 மில்லியன் டாலர்கள்.

முதலீட்டாளர்கள் உதவியால் வளரும் ஒரு ஸ்டார்ட்அப்பின் பயணத்தில் முக்கியமான விஷயம், எந்த இடத்தில் லாபத்தோடு வெளிவர வேண்டும் என்பதில் ஒரு தெளிவு இருக்கவேண்டும். பெரும்பாலும் அந்தப் பொறுப்பை முதலீட்டாளர்கள் பார்த்துக்கொள்வார்கள். இவர் கதையில் அது தான் நடந்தது. இவரது முதலீட்டாளர்க்கும் மிகப்பெரிய லாபம். 3 மில்லியன் முதலீட்டிற்கு 200 மில்லியன் டாலர் லாபம் அதவும் மூன்றே வருடத்தில் என்றால் சும்மாவா? ரஜினி படத்தில் கூட கிடைக்காத Return on investment சதவிகிதம் அது.

இதோடு இவரது வெற்றிக்கதை முடியவில்லை. இங்கிருந்து தான் ஆரம்பிக்கிறது. அடுத்தடுத்து இவர் தொடங்கிய எல்லா ஸ்டார்ட்அப் முயற்சிகளும் காலத்தை தாண்டிய முற்றிலும் புதியவை. அவற்றை பேச இன்னுமொரு அத்தியாயம் எடுத்துக்கொள்வோம். ஐந்து ஸ்டார்ட்அப் தொடங்கி பில்லியன் டாலர் கம்பெனிகளாக வளர்த்தெடுத்த கதையை சொல்ல குறைந்தது இரண்டு அத்தியாயங்களாவது வேண்டாமா? அவை அத்தனையிலும் எண்ணற்ற ஸ்டார்ட்அப் பாடங்கள் உண்டு. கற்போம் புதிய உலகத்தை.

ஒரு ஐடியா பிறக்க அடிப்படை, நிறைய விஷயங்களை தெரிந்து கொள்வது. தனக்கு  வேண்டியதை தான் படிப்பேன், தெரிந்துகொள்வேன், வேலை செய்வேன் என்று எண்ணுபவர்களுக்கு நல்ல ஐடியா கிடைப்பதில்லை. எப்போதோ படித்த விஷயம் ஒருநாள் நீங்கள் காணும் பிரச்னைக்கு தீர்வை கொடுக்கலாம் அல்லது புதிய விஷயத்திற்கு அடிகோலாக இருக்கலாம். வாசிப்பு என்பது ஐடியா மட்டும் கொடுக்காது. எந்த நிலையிலும் நம்பிக்கையை இழக்காமல் தாங்கிப் பிடிக்கும். சபீர்பாட்டியா தனது முதல் ஸ்டார்ட்-அப்பிற்கு பிறகு தேங்கியதற்கும் அடிப்படை காரணம் வாசிப்பு இல்லாததே. அதேநேரம் எலன் மஸ்க் அடுத்தடுத்து ஸ்டார்ட்-அப்புகளை தொடங்கி வெற்றி நடை போடுவதற்கு முக்கிய காரணம் சிறுவயது வாசிப்பு தான்.