பணவீக்கம் உண்டாக்கும் 10 பாதிப்புகள்!

பணவீக்கம் உண்டாக்கும் 10 பாதிப்புகள்!


நீங்கள் வேலை முடிந்து வீட்டுக்குத் திரும்பும்போது நாளைக்கு வண்டிக்கு பெட்ரோல் போட்டுக்கொள்ளலாம் என்று நினைத்திருந்தால், நள்ளிரவு முதல் விலையேற்றம் அமல்படுத்தப்படுகிறது என்ற அறிவிப்பு உங்களைச் சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்தும். இதற்குக் காரணம், பணவீக்கம்தான். சாதாரணமாகச் சொல்வது என்றால் விலைவாசி உயர்வு. இது தனிநபர், குடும்பம், வர்த்தகம் மற்றும் நாடு என்று ஒவ்வொரு நிலையிலும் வேகமாக அதிகரித்து வருகிறது. ராக்கெட் வேகத்தில் உயரும் பணவீக்கம் நம் அன்றாட வாழ்வில் ஏற்படுத்தும் பாதிப்புகள் குறித்து பங்குச் சந்தை நிபுணர் வி.நாகப்பனிடம் நாம் கேட்க, 10 பாதிப்புகளை எடுத்துச் சொன்னார்.

1.உண்மையான வருவாய் விகிதம்!

பணவீக்கமும், வட்டி விகிதமும் ஒன்றுக்கொன்று தொடர்புடையது. பணவீக்கம் அதிகமாகவும், நாம் சேமிக்கும் பணத்தின் மீதான வட்டி விகிதம் குறைவாகவும் இருக்கும்போது அது நிச்சயம் நம் அன்றாட வாழ்வை பாதிக்கும்.

உதாரணமாக, நாம் 100 ரூபாய் சேமிக்கிறோம் எனில், தற்போதைய சூழலில் சராசரியாக 9% வட்டி கிடைக்கிறது. ஆண்டுக் கடைசியில் ரூ.109 உங்கள் கையில் இருக்கும் வட்டியும் முதலும் சேர்த்து; ஆனால், பணவீக்கம் சுமார் 10% என்ற அளவில் உள்ளதால் சேமிப்பின் மூலம் உங்களுக்குக் கிடைத்த ரூ.109-யைக்கொண்டு பணவீக்கத்தினால் 110 ரூபாய் விலையேறிய பொருளை வாங்க முடியாத சூழல் உருவாகும்.


அதற்காக அத்தியாவசியப் பொருட்களை வாங்காமல் இருக்க முடியுமா? அந்த ஒரு ரூபாய் பற்றாக்குறையை சமாளிக்க நாம் என்ன செய்வோம்? கையிருப்பில் இருந்து செலவு செய்வோம் அல்லவா? இப்படியே கொஞ்சம் கொஞ்சமாக நம் சேமிப்பு கரைந்துவிடுவதால்தான் நடுத்தட்டு மக்கள் என்றுமே நடுத்தட்டு மக்களாகவே இருக்கின்றனர். எனவே, வட்டி விகிதம் 9 - 12% என்பதைவிட, பணவீக்கத்தைவிட  உங்கள் சேமிப்புக்கான வருமானம் அதிகமா, குறைவா என்பதுதான் மிக முக்கியம். அதுதான் உண்மையான வருவாய்.

2.வாங்கும் திறன் குறையும்!

பணவீக்கம் அதிகரிப்பதால் அனைத்து தரப்பினரும் சந்திக்கும் முக்கியமான பாதிப்புகளில் ஒன்று, பொருள் வாங்கும் திறன் கணிசமான அளவில் குறைவதே. அவர்கள் வருவாயை வைத்து தற்போதைய விலைவாசி உயர்வை சமாளிக்க முடியாததையே இது காட்டுகிறது. இதற்கு சரியான எடுத்துக்காட்டு, முன்பெல்லாம் வாரம் ஒருமுறை பொருட்களை வாங்குபவர்கள், தற்போது மாதம் இருமுறை என்று மொத்தமாக வாங்கி வைத்துவிடுவதே. இது தனித்தனியாக வாங்கும் அளவைவிடக் குறைவாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

3. பொருட்களின் பதுக்கல் அதிகரிக்கும்!

பணவீக்கம் அதிகரிப்பதால் பொருட்களின் கையிருப்பை அதிகரித்துக்கொள்ளவே எல்லாரும் விரும்புவார்கள். ஒருவேளை, அதன் விலை கூடினால் பின்னர் அதிக விலைக்கு விற்றோ அல்லது நமது பயன்பாட்டை லாபகரமாக்கிக் கொள்ளவோ நினைப்பார்கள்.

ஆனால், குறுகிய காலப் பொருட்களான காய்கறிகள் போன்றவற்றைக் குறிப்பிட்ட காலத்துக்குமேல் வாங்கி வைத்துக்கொள்ள முடியாது. இரும்பு போன்ற கெட்டுப் போகாத பொருட்களை நீண்ட கால தேவைக்கு வாங்கமுடியும். உண்மையான தேவைக்கு அதிகமாக, இதுபோன்று தேக்கி / பதுக்கி வைப்பது பொருளின் தேவையை மேலும் அதிகரிக்க செய்து, அதன் விலையை அதிவேகமாக ஏற்றும்.

4.கடன் தவணை அதிகரிக்கும்!

வீட்டுக் கடன் அல்லது வாகனக் கடன் போன்ற ஏதேனும் ஒரு கடன் வாங்கி இருப்ப வராக இருந்தால், பணவீக்கத்தால் வட்டி விகிதம் உயரும். இதனால் தவணைக் காலமோ அல்லது மாதாந்திர தவணைக் கட்டணமோ அதிகரிக்கும்.

உதாரணத்துக்கு, நீங்கள் 15 வருடத் தவணையில் மாதம் ரூ.15,000  கட்டும்படி கடன் வாங்கி இருந்தால், அது உங்கள் தவணைத் தொகையைவிட அதிகமாகவோ, அல்லது  தவணைக் காலத்தைவிட  அதிகமாகவோ வாய்ப்புள்ளது.

5. தரம் குறையும்!

பொருட்களின் விலை உயரும் போது பயன்பாட்டாளர்கள் தங்கள் வருமானத்துக்கு எதிராக விலை உயர்வதால், முதல்தரத்தில் உள்ள பொருட்களைத் தவிர்த்து, இரண்டாம்தர பொருட்களை நோக்கி செல்ல வாய்ப்புள்ளது. பணவீக்கத்தைச் சமாளிக்க முடியாத நிறுவனங்களுமே உற்பத்தியில் தரத்தைக் குறைக்கவும்  வாய்ப்புள்ளது.

6. கம்பெனிகளின்   செலவு கூடும்!

பணவீக்கம் அதிகரிப்பு, நுகர்வோரைத் தாண்டி தொழில் செய்பவர்களையும் பாதிக்கும். ஏனெனில், அவர்கள் வாங்கும் மூலப்பொருட்களின் செலவு தொடங்கி பணியாளர்களுக்கு வழங்கும் சம்பளம் வரை அனைத்துக்குமே செலவு அதிகமாவதால் அவர்கள் உற்பத்தி செய்து விற்கும் பொருளுக்கும் விலையை உயர்த்த வேண்டிய சூழல் ஏற்படும். நுகர்வோர் மற்றும் நிறுவனங்கள் ஆகிய இரண்டுமே இதனால் பாதிப்படையும். விலையேற்றத்துக்கு முன் மூலப்பொருட்களை வாங்கி வைத்திருக்கும் நிறுவனங்களுக்கு மட்டும் இது லாபகரமாக அமையலாம்.

7. தங்கம் விலை செயற்கையாக அதிகரிக்கும்!

பணவீக்கம் அதிகமாகும் போது விலையேறிவிடுமோ என்ற பயத்தில் மக்கள் தங்கத்தை வாங்கிக் குவிக்கத் தொடங்கிவிடுவார்கள். அப்போது தங்கம் தேவையைவிட அதிகமாக வாங்கப்படும். தங்கத்தின் விலை செயற்கையாக அதிகரிப்பதால், பலராலும் தங்கம் வாங்க முடியாத நிலை ஏற்படும்.

8. பொருட்களின் அளவு குறையும்!

நிறுவனங்கள் பணவீக்கத்தைச் சமாளிக்க எடுக்கும் நடவடிக்கைகளில் ஒன்று, அளவை குறைப்பது. அதாவது, 100 மில்லி உள்ள ஷாம்பு பாட்டிலை ஒரு நிறுவனம் 50 ரூபாய்க்கு விற்கிறது எனில், பணவீக்கத்தைச் சமாளிப்பதற்கு அந்தப் பொருளின் விலையை உயர்த்தாமல், அதே 50 ரூபாய்க்கு 80 மில்லி ஷாம்புவைத் தரும். நமக்கு ஒரே விலைதானே என்று தோன்றினாலும். மறைமுகமாக 100 மில்லியை நாம் 62.50 ரூபாய்க்கு வாங்குகிறோம்.

9. அத்தியாவசியத் தேவைகள் பாதிக்கப்படும்!

விலைவாசி உயர்வால் மாதம் 60 கிலோ அரிசி வாங்கியவர் 50 கிலோ வாங்கும் சூழல் உருவாகும். இதேபோல் பெட்ரோல், போன் போன்ற அத்தியாவசிய தேவையிலும் பாதிப்பு ஏற்படும்.

10. லைஃப்ஸ்டைல் பாதிப்படையும்!

பணவீக்கம் என்பது பொருட்களின் வாங்கும் திறனை மட்டும் பாதிக்கவில்லை. அது நம் வாழ்க்கைத் தரத்தையும் பாதிக்கிறது. குறிப்பாக, பணவீக்க விகித அதிகரிப்பால் கல்வி மற்றும் மருத்துவச் செலவுகள் அதிகரிக்கும்போது விலை குறைந்த பொருளை வாங்கும்  நிலைக்குத் தள்ளப்படுவோம். இதனால், நம் லைஃப்ஸ்டைல் பாதிப்படையும்.

உதாரணமாக, தனியார் பள்ளிக் கூடத்தில் பிள்ளையைப் படிக்க வைத்தவர்கள் இனி அரசு பள்ளிக் கூடத்தில் சேர்க்கும் சூழல் உருவாகும். பணவீக்கம் அதிகரிக்கும்போது இது மேலும் அதிகரித்து பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.